பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/383

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



371



இனிய செல்வ, இன்று இந்தியாவுக்குத் தேவை ஒற்றுமை! ஒருமை; ஆனால் நாளும் நடப்பதென்ன? நமது நாட்டுப் படத்தை எடுத்து சாதி, வகுப்பு மதக்கலவரங்கள் நடக்கும் பகுதியை அடையாளமிட்டுக் காட்டு என்றால் எந்த மாநிலம் இந்த அடையாளத்தைப் பெறாமல் தப்பிக்க இயலும்? இனிய செல்வ, ஏன் இந்த அவலம்? நாம் கூட உண்மையாகச் சொல்கின்றோம் - நாம் "இந்தியராக” இருக்க ஆசைப்படுகின்றோம்; "இந்து”வாக இருக்க ஆசைப்படுவதில்லை. ஏன்? அதனாலேயே சைவத்தை எடுத்துக்கொண்டு வலியுறுத்தி, சைவமாக வாழ ஆசை; ஆம்; "எந்நாட்டவர்க்கும் இறைவா பேற்றி?" என்பது சைவ வாழ்வு. இன்று நமது சமுதாயத்தில் எண்ணற்ற சாதிகள்; இவைகளுக்கிடையே ஆரோக்கியமில்லாத போட்டிகள் இந்து-முஸ்லீம் சண்டைகள்; இந்து-கிறிஸ்துவச் சண்டைகள், இனிய செல்வ, பாரதி கூறியது போல, "ஒரு பரம் பொருள்” தான் முக்கியம் ‘ஏகம் ஸத்விப்ரா பஹீதா வதந்தி’ இருப்பது ஒன்றே. மகான்கள் அதற்குப் பல பெயரிட்டு அழைக்கிறார்கள். அப்படியானால் முஸ்லீம்கள் தொழும் அளவற்ற அருளாளனும், கிறிஸ்தவர்கள் போற்றி வணங்கும் பரமண்டலத்திலுள்ள பரமபிதாவும் இந்துக்கள் தொழும் பல்வேறு திருநாமங்கள் கொண்ட கடவுளும் ஒருவரே; ஒருவரே; அப்படியானால் கலகம் ஏன்? சண்டை ஏன்? அதுதான் புரியாத புதிர்; மதங்கள் பழக்க வழக்கங்களைச் சார்ந்தவை. இவை மாறுபடலாம்; மறுக்கப்படலாம். அதனால் குடி ஒன்றும் கெட்டுவிடாது. அதிலும் நமது தமிழ்நாட்டு மக்களுக்குப் பொறுப்பு மிகுதியும் உண்டு. காரணம் ஒருமையைப் பற்றி அதிகமாகப் பேசப்பட்ட நாடு தமிழ்நாடு; இனிய செல்வ, நமது திருவள்ளுவர்.

"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்"

(214)