பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/389

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



377


கொட்டகைகள் அதிகம்! இரவும் பகலும் காட்சிகள் நடக்கின்றன! போதும் போதாதற்குத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வேறு திரைப்படங்கள் காட்டுகின்றன! இனிய செல்வ, இவ்வளவும் ஏன் எழுதினோம் என்று நினைக்கிறாயா? நமது நிதியைப் பற்றிய பொறுப்புணர்வுடன் கூடிய அணுகுமுறை பாரிடமும் இல்லை.

இனிய செல்வ, சம்பாதிப்பதனால் மட்டும் செல்வனாகிவிட முடியாது! நிதியை எப்படிச் செலவழிக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் செல்வனாக முடியும். "வறுமையைவிடச் சிக்கனமின்மை மிகக் கொடிது” என்பது சீனப் பழமொழி! வறுமையை மாற்றலாம். சிக்கனமின்மையை மாற்றுவது கடினம்! பணம் செலவழிக்கப் போகிறாயா? இந்தச் செலவால் உனக்கு என்ன நன்மை? உன் குடும்பத்துக்கு என்ன நன்மை? ஊருக்கு என்ன நன்மை? என்று ஆராய்ந்து அறிந்து செலவு செய்யும் பழக்கம் வேண்டும். சிக்கனம் என்பதும் வருவாயை ஒத்தது என்ற எண்ணம் வளர்ந்தால் பலகோடிக் கணக்கில் நமது நாட்டில் பணம் மிஞ்சும். ‘எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை’யே நமது நாட்டினர், சிக்கனச் சேமிப்பிலிருந்து நிறைவேற்ற முடியும். இனிய செல்வ, நமது திருவள்ளுவர், "வருவாய் நிறைய வரவில்லையா? ‘கவலைப்படாதே’ செலவுகளுக்குரிய வாயில்கள் அகலாமல் பார்த்துக் கொள்” என்றார்.

“ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை”

(478)

என்பது திருக்குறள்.

இன்ப அன்பு
அடிகளார்
49. இட ஒதுக்கீடு

இனிய செல்வ,

மண்டல் குழு அறிக்கையின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்த நடுவண் அரசு முடிவெடுத்திருக்கிறது.