பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/393

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



381


ஆண்டுகளுக்கு ஒரு தடவை மறு ஆய்வு செய்து அந்தந்த நிலைகளில் இருத்தி மேம்பாடு அடையச் செய்யலாம். இந்த நடைமுறை கல்வியைப் பொருத்த வரையில் ஆகும்.

இனிய செல்வ, அரசுப்பணி மனைகளில் இட ஒதுக்கீடு! இன்று அரசுப் பணிகளுக்கிருந்த மதிப்பீடு குறைந்திருக்கிறது. தன்னம்பிக்கையும் ஆசையும் உடைய சிலர், அரசுப் பணிகளிலிருந்து விலகித் தனியே தொழில் தொடங்குகின்றனர். அல்லது தனியார் துறைப்பணிக்குச் செல்கின்றனர். வேலை வாய்ப்புகளை நிறைய உண்டாக்குவதன் மூலமே வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்கவும் வேலை வாய்ப்புத் துறையில் உள்ள ஆரோக்கியமில்லாத போட்டிகளைத் தவிர்க்கவும் வழி ஏற்படும். அதுவரையில் அரசு அலுவலகங்களில் இரண்டு மூன்று நிலைகளில் பணிபெற்ற குடும்பங்கள் இரண்டு தலைமுறை பணி பெறலாம். கடைநிலை ஊழியர் குடும்பங்கள் மூன்று தலைமுறை வரையில் பெறலாம். ஆனால் அடுத்த நிலைப் பணிகள் அளவுக்கு தரத்தை-தகுதியை உயர்த்திக்கொண்டாலே பெறலாம். அப்படி இல்லையெனில், இரண்டு தலைமுறை மட்டும் தான் பெறலாம். அகில இந்தியப் பணி - முதல்தர நிலைப்பணி பெற்ற குடும்பங்கள் (l.A. S, I.P.S.) பெற்ற அளவிலேயே முன்னேற்றமடைந்த சாதியைச் சேர்ந்த குடும்பங்கள் என்று கருதப்படுதல் வேண்டும். இந்தக் குடும்பங்கள் எதிர்ப்பார்த்தபடி வளராது போனால் பெற்ற வளர்ச்சியை நிலைப்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டால் மூன்றாந் தலைமுறையில் சலுகைகளைப் பெறலாம் (ஆயினும் உரிமையாகாது). இனிய செல்வ, வேலை வாய்ப்பைப் பொருத்தவரை, நிறைய வேலை வாய்ப்புக்களை உண்டாக்குவதே தீர்வுக்குள்ள ஒரே வழி. இந்தியா, தனியார் துறையிலும் சரி, பொதுத்துறையிலும் சரி, அரசு திட்டமிட்டால் வேலை வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன; உருவாக்க முடியும்.