பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/396

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தவறுகின்றோம். நம்மால் இன்று அலட்சியப்படுத்தப்படுவது நாட்டின் அடிப்படை பிரச்சனைகளே! அதாவது, மனித நேயத்தை, மனித உறவுகளை அலட்சியப்படுத்துகின்றோம். இனிய செல்வ, நமது நாட்டிலும் சரி, உலக நாடுகளிலும் சரி முற்காலத்தில் மனித உறவுகள் போற்றி வளர்க்கப்பெற்றன. சாதிகள், மதங்கள், அதிகாரங்கள், மரியாதைகள், சம்பிரதாயங்கள் இவைகளைக் கடந்த நிலையில் நமது நாட்டில் ஒரு காலத்தில் மனிதம் மதிக்கப் பெற்றது; சமுதாய உறவுகளில் நிதானம் இருந்தது.

இன்று அந்த நிதானம் எங்குப் போயிற்று? நிதானம் முன்னேற்றத்துக்கு முரண்பட்ட ஒழுக்கமா? இல்லை, பகைத்துத்தான் வாழவேண்டுமா? எதையாவது ஒன்றை இழந்தால்தான் வாழ இயலுமா? இயலாதா? பழைய ஞானத்துடன் விஞ்ஞானம் இணையாதா? பாபர் மசூதியை இழந்தால்தான் இராமர் கோயில் தோன்றுமா? இனிய செல்வ, நாம் போகிற போக்கைப் பார்த்தால் ஞானம்-விஞ்ஞானம் என்ற இரண்டையுமே இழந்துவிட்டு சாதிகளையும் மதங்களையும் சண்டைகளையும் தான் பாதுகாப்போம் போலத் தோன்றுகிறது. இது விரும்பத்தக்க தல்ல.

இனிய செல்வ, உலகில் வேற்றுமைகளே அதிகம். அதிலும் இந்தியாவில் வேற்றுமைகள் ஏராளம்! நாம் வேற்றுமையைத் தேட வேண்டாம். அவை எளிதில் புலனாகின்றன. ஆயினும் வேற்றுமைகளுக்கிடையில் ஒற்றுமையைக் காண்பதை. வளர்ப்பதை விழுமிய குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். எண்ணத் தொலையாத சாதிகள் உள்ளன. மண்டல் குழுப் பட்டியல்படி 3743 சாதிகள்! இந்தியாவில் நூற்றுக் கணக்கான மதங்கள்! அரசியல் கட்சிகள் பலப்பல! இப்படி இந்தியா இன்று பலப்பல குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தக் குழு மனப்பான்மையை அரசுகள் ஊக்கமளித்து வளர்க்கின்றன. எங்கும் உட்பகை! இதனால் இந்தியா இன்று வேந்தமைவு