பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/400

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சீலமுடையோரே நடுவுநிலை நெறி நிற்பர். இனிய செல்வ, நடுவுநிலையின் இலக்கணத்தைத் திருக்குறள் விளக்குவதை அறிவாயாக!

"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி"

(118)

இனிய செல்வ! கடைக்குள் பண்டங்கள் வாங்கச் சென்றிருக்கிறாயா? அங்குப் பண்டங்களை நிறுத்துக் கொடுக்கும் தராசு பார்த்திருக்கிறாயா? பழைய காலத்தில் அந்தத் தராசை முதலில் தூக்கி, தராசு சமநிலையில் இருப்பதைக் காட்டுவர்! அதாவது தராசில் கோளாறு இல்லை என்பதைக் காட்டுவர்! பின் நிறுப்பர்! முதலில் தராசின் வேறுபாடற்ற-பழுதற்ற சமன் நிலையைக் காட்டு தலை, “சமன்செய்து” என்றார் திருவள்ளுவர். இனிய செல்வ, ஒரு சிக்கலுக்குத் தீர்வு செய்பவர் முதலில் சார்பின்றி, சமநிலையில் இருதரப்பார் செய்திகளையும் உற்றறியும் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும். அவர்களே சான்றோர்! இனிய செல்வ, இன்று நாம் சான்றோரைக் காண முடிகிறதா? இல்லை! ஏன்? எல்லாரும் சாதி, மதம், எனது, உனது, புகழ்ச்சி, இகழ்ச்சி ஆகியவற்றில் சிக்கிக் கொண்டவர்களாகவே விளங்குகின்றனர்.

இனிய செல்வ, உலக நாடுகள் பேரவை ஐ.நா. சபை அமைந்திருக்கிறது. ஆனால் ஐ.நா. சபையில் இடம் பெற்றிருப்போர் சான்றோர்களா? உலக சமாதானத்தைப் பேணி, உலகத்தை ஆக்கவழியில் உய்த்துச் செலுத்த வேண்டிய ஐ.நா. சபை ஓரஞ்சார்ந்து நடைபோடுவது போலத் தெரியவில்லையா? அமெரிக்காவின் கை. ஐ.நா சபையில் ஓங்கியிருப்பதுபோல் இல்லையா? இனிய செல்வ! வளைகுடாப் போர் வந்துவிட்டதே! ஏன்? ஈராக் அதிபர் சதாம்உசேன் மட்டுமா காரணம்? இல்லை! ஐ.நா., சபையும் காரணம்.