பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/408

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெருமை எளிதில் வரலாம்; கிடைக்கும். அந்தப் பெருமை நம்மிடம் செருக்கைத் தந்துவிடக் கூடாது, யார் மாட்டும் எளியராக, இரவன் மாக்களைப் போல எளிய மொழிகளைப் பேசி உறவுகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். பெருமிதம் என்ற தவறான குணம் வந்து சாராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த இனிய பண்பாட்டை மாண்புமிகு முதல்வர் அவர்களின் தொலைக்காட்சிப் பேட்டி எடுத்துக் காட்டியிருக்கிறது. அதாவது ஆட்சியின் உறுப்புக்கள்-காவல் துறையினர். ஆட்சித்துறை அலுவலர்கள் மீது எந்தக் குறையும் சொல்லாதது மட்டுமின்றி அவர்களுடைய திறமையை வியந்து கூறியமை உணர்த்துகிறது. இது ஒரு நல்ல மரபு. ஆதலால், வெற்றி பெற்றதைவிட இந்த வெற்றியைப் பாதுகாத்துக் கொள்வதிலும் பயனுடையதாக்குவதிலும் அதிகக் கவனம் தேவை; ஆற்றல் மிக்க முயற்சி தேவை.

பெருமை பெருமிதமின்மை சிறுமை
பெருமித மூர்ந்து விடல்

(979)

இந்த இயல்பை, அ.இ.அ.தி.மு.க. கட்சியினர் பெற்று விளங்கி மாண்புமிகு முதல்வருக்கு உற்ற துணையாக அமைய வேண்டும் என்பது நமது விருப்பம்.

இன்ப அன்பு
அடிகளார்
56. நடந்தாய் வாழி காவேரி

இனிய செல்வ,

மானுடத்தை உந்திச்செலுத்தி வரலாறு படைக்கும் திசைநோக்கி நகர்த்துவது மனிதரின் எண்ணங்களேயாம். மனிதனின் எண்ணங்களுக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. இனிய செல்வ, திருக்குறள்,

"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்"