பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/419

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



407


யிருக்கிறார்கள்! இன்றைய சூழ்நிலையில் வேற்றுமைகளைப் பேசி விவாதங்களை வளர்க்காமல் இன்றையத் தேவையாகிய ஒருமைப்பாடு ஒன்றினையே மையமாகக் கொண்டு அணுகுதலே சிறந்த முறை. விவாதங்கள் வளர வளர வீம்பு உணர்வுதான் வளரும்! உண்மை மறைந்து விடும்!

இனிய செல்வ, ஆரியம்-தமிழ், ஆரியன்-தமிழன் என்ற பிரிவினை தோன்றி வளர்ந்து பல்லாயிரம் ஆண்டுகளாகிவிட்டன! நால்வேதம் எது? ஆகமம் எது? ஆரியம் எது? என்று வினாக்களை எழுப்பிக் கொண்டே போகலாம். இதனால், திறமை வளரலாம்! பண்பாடு வளராது! இதனைத் தமிழ் நாட்டு மக்கள் உணர்தல் வேண்டும். எதிலிருந்து எது வந்தது? சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் வந்தது-இந்த ஆராய்ச்சி இன்று தேவைதானா?

இனிய செல்வ! தமிழை இரண்டாம் நிலைக்குத்தள்ளும் முயற்சி நல்லதல்ல; வரவேற்கவும் முடியாது. இதனைத் தமிழ் நாட்டில் உள்ளோர் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த முயற்சியில் ஈடுபடுவோர் நெறியல்லாதன செய்கிறார்கள்! குற்றமே புரிகிறார்கள் என்று உணர்தல் வேண்டும். இனிய செல்வ, நமது திருக்கோயில்கள் வேதங்கள், ஆகமங்களைக் கடந்து திருமுறைகளின் நெறிக்கு வந்து விட்டன! இன்றைக்குத் திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள இறை, திருமுறைப் பாடல்களைக் கேட்டு எழுந்தருளியுள்ள இறையே என்பதை உணர்தல் வேண்டும். சடங்கு நெறியைக் கடந்து பத்திமை யுகத்திற்கு வந்தாயிற்று! இனி, ஞான நெறியே நமக்குத் தேவை.

இனிய செல்வ, இன்றையத் தேவை இந்தியா. ஆதலால், விவாதங்கள், வேண்டாம்! வேதங்கள் நம்முடைய மண்ணில் தோன்றியவையே! ஆகமங்களும் நம்முடையனவே! இவற்றில் ஆதிபத்தியச் சாயல்கள் உடைய பகுதிகளை ஏற்காது தவிர்க்கலாம்; தவிர்க்க வேண்டும். நமது இந்தியப் பண்பாட்டிற்கு-தமிழ்ப் பண்பாட்டிற்கு அனுசரணையாக