பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/434

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பற்றித் திருவள்ளுவருக்கு நல்லெண்ணம் இல்லை. தேவர்களைக் "கயமை” அதிகாரத்தில் வைத்துத் திட்டுகிறார். தேவர்கள் கயவர்களைப் போன்றவர்கள் ஏன்? தேவர்கள் நல்லன, இன்பந்தருவன பார்த்துச் செய்வார்கள். கயவர்கள் தாம் நினைப்பன வற்றையெல்லாம் செய்வார்கள். தாம் செய்யும் செயல்களால் விளையும் பயன் அல்லது எதிர் விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். தேவர்களும் அப்படித்தான்! கயவர்களுக்கு அவர்தம் வாழ்வே பெரிது. மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். பிறர் துன்பத்தில் இவர்கள் இன்புறுவார்கள். தகுதியில்லாதவற்றையெல்லாம் அடைய விரும்புவார்கள். அவசியமானால் பொய்யும் பேசுவர்; சூதும் செய்வர். பிறர் பொருள் விரும்பல், பிறர் மனை நயத்தல், வளர அத்தனை கீழ்மையான செயல்களையும் செய்வர். ஏன்? தம்மையே விலைகூறி விற்றுக் கொள்வர். எவருக்கும் எந்தச் சூழ்நிலையிலும் பயன்படமாட்டார்கள். உபயோகத்திற்கு உரியவராகார்; கரும்புபோல் கொல்லப்பயன்படுவர். அறியாமை மிகுதியும் உடையவர் கயவர். ஆனால், அறிவுடையார் போல நடிப்பார். சொன்னாலும் கேட்டுச் செய்யார்; சுய புத்தியுடனும் செய்யார். இத்தகு கயவர்களைக் "கீழ் மக்கள்" என்று இலக்கியங்கள் கூறும். இவர்கள் திருந்துதல் அரிது. காஞ்சிரங்காயைத் தேனில் ஊறப்போட்டால் இனிக்குமா; என்ன? கரியைப் பால்விட்டுக் கழுவினால் வெண்மையாகுமா? கரி, கரிதான்! அதுபோல் கயவர்கள் திருந்த மாட்டார்கள்.

இன்று நாட்டில் கயமைத் தனம் வளர்ந்து வருகிறது. இது வளரும் நாட்டுக்கு நல்ல தல்ல. சின்னஞ்சிறு கதைகள் பேசிப் பொழுதைக் கழிக்கும் கயவரால் விளையப் போவது என்ன? ஒரோ வழி அவர்கள் நன்மை செய்வது போலக் காட்டினாலும் அதில் அவர்களுடைய சுயநலம் புதைந்து இருக்கும். கயவர்கள் சிலபொழுதுகளில் கொடுத்தாலும் கூட அதிலும் ஒன்று குறி ஈர்ப்பு இருக்கும்.