பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/439

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



427


இலட்சிய நோக்குடைய வாழ்க்கையோடு தொடர்பில்லாத நிலையில் அரசியல் போனநிலையில் இன்று நாம் வாழ்கின்றோம். எங்கும் வன்முறை பெருவழக்காகிவிட்டது. இந்த நிலை எங்கும் மாற வேண்டும். அறமல்லாதவற்றை அகற்றவும் கூட அன்பே கருவி! இதுவே திருக்குறள் நெறி!

"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை"

இனிய செல்வ, வன்முறையைத் தவிர்ப்போம்! மனித குலத்தைக் காப்போம்.

இந்தியாவில் - சிற்றூர் முதல் பேரூர் வரையிலும் வன்முறைக் கலாசாரம் நாளும் பெருகி வளர்கிறது. பொது வாழ்க்கையின் தரம் குறைகிறது, நல்லவர்கள் அப்பாவிகளாகின்றனர். இது தான் இன்றைய இந்தியா? உலகம் என்ன வாழ்கிறது? சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இனக்கலவரம். இனக்கலவரத்திற்குரிய அடிப்படையை ஆராயும்பொழுது மனித குலம் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது. "நீதி” நீதியாக இல்லாமல்-இனம் கருதி சாய்ந்து கொடுக்கிறது. இது நியாயமா, சாதி, இனம், கட்சி? மதம் என்ற பிடிப்புகளிலிருந்து நீதி - சமூக நீதி மீட்கப்பட்டால்தான் உயிர்க் குலத்திற்கு நன்மை உண்டு. பாதுகாப்பு உண்டு. வாழ்க்கையில் நடுவு நிலைமைப் பண்பு கடைப்பிடியாக ஒழுக்கமாக இடம் பெற வேண்டும். இனிய செல்வ! திருவள்ளுவர் நடுவுநிலைமை என்று ஓர் அதிகாரமும் எடுத்துக் கூறினார். இனிய செல்வ! ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் கூடி உலகியல் நடத்த வேண்டும். எங்கும் எந்தச் சூழ்நிலையிலும் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். மற்றவை அடுத்த கடிதத்தில்.

இன்ப அன்பு
அடிகளார்