பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/446

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ப.சிதம்பரம் இந்தத் தவறுகளையெல்லாம் செய்யவில்லை. பங்குகளைச் சந்தையில் வாங்கியதுதான் அவர் செய்தது! ஆயினும் ராஜிநாமா செய்துவிட்டார். அன்று ஓ.வி.அளகேசன், லால்பகதர் சாஸ்திரி! இன்று ப.சிதம்பரம்! மிகமிக உயர்ந்த மரபு!

ஆம்! மாண்புமிகு ப.சிதம்பரம் நல்ல சிந்தனையாளர். செயல்திறம் உடையவர்! அவர் ஏன் இந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டார்? புரியாத புதிர்! நாடு தழுவிய நிலையில் பத்திரிகைகளில் ப.சிதம்பரம் பற்றிய செய்திகள் வெளிவந்தன. ஒன்றும் கண்டிக்கவில்லை. விதி முறைப்படி தவறில்லை. அறநெறிப்படி தவறு என்று இதழ்கள் எழுதின. யார் எதைச் சொன்னால் என்ன? ப.சி. ராஜிநாமா செய்து விட்டார். தமது நிலையை மிகமிக உயர்த்திக் கொண்டு விட்டார்! பம்பாய் இதழ் ஒன்று கூறியதுபோல ப.சி. ராஜிநாமாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெற்றுக் கொள்வாரா, என்ன? ஒருபோதும் மாட்டார்!

நாம் ப.சி. அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்; தாங்கள் அடுத்து நாட்டுக்கு நல்லது என்று எதை நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள் என்று! இனிய செல்வ, இன்றைய அரசியலில் ப.சி. ஒரு குறிஞ்சி மலர், திருவள்ளுவர் கூறிய கவரிமான் சாதி! வளர்க ப.சி.!

இன்ப அன்பு
அடிகளார்
70. பொறுமையின் இலக்கணம்

இனிய செல்வ,

திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல். திருக்குறள் வாழ்க்கை நூலாதலே வேண்டாம் என்று பலரும் பேசுகின்றனர்; எழுதுகின்றனர். திருக்குறள் வாழ்க்கை நூலாதல் இயலுமா? அதுவும் இந்த நூற்றாண்டில் இயலுமா?