பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/450

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முதலிய நாடுகளில், மற்ற நாடுகளில் மக்களாட்சி அமைவதற்கு முன்பே அரசியற் கிளர்ச்சி நடந்து மக்களாட்சி முறை அமைத்துவிட்டனர். இங்கிலாந்தில் அரசர் பரம்பரை இருந்தாலும் பாராளுமன்ற ஆட்சி முறை அமைந்துள்ளது. இந்த வேலை முடிந்தபிறகு, அந்த நாடுகளில் அரசியல் இயக்கங்கள் தங்களுடைய வேகத்தைத் தணித்துக் கொண்டு நாட்டின் முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்துகின்றன. அதனால் அந்த நாடுகள் வளர்கின்றன.

நமது நாட்டு வரலாறு வேறு மாதிரியாகச் செல்கிறது. நமது நாட்டிலும் சுதந்தரப் போராட்டம் நடந்ததுண்டு. அப்போது அதில் ஈடுபட்டவர்களுடைய எண்ணிக்கை அளவில் கூடுதல் என்று சொல்ல முடியாது. நமது சுதந்தரப் போராட்டம் மக்கள் போராட்டமாக நடந்ததா என்பதே ஆய்வுக்குரிய செய்தி! ஆனால், சுதந்தரத்துக்குப் பிறகுதான் நமது நாட்டில் அரசியல் சூடுபிடித்திருக்கிறது. புதிய புதிய கட்சிகள் தோன்றுகின்றன; தலைவர்கள் தோன்றுகின்றனர். ஊர்தோறும் கட்டப்பெற்றுள்ள கொடிகளை எண்ணினால் நமது நாட்டுக் கட்சிகளை எண்ணிச் சொல்லிவிடலாம்! இனிய செல்வ, அக்காலத்தில் ஒரு சிற்றூரில் ஒரு குடும்பம் அல்லது இரண்டு குடும்பங்கள் அரசியலில் ஈடுபட்டன. இக்காலத்தில் அரசியலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இது தவறன்று. மேலும் கூடக்கூடலாம்; கூடவேண்டும்! ஆனால், மக்களாட்சி முறைக்குரிய நெறி முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இனிய செல்வ, திருவள்ளுவர் முடியாட்சிக் காலத்தில் இருந்தவர். அவர் இந்தக் காலத்துக்குடியாட்சி முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். அரசன் இருக்கலாம்; அரசுகள் இருக்கலாம், அரசுகளுக்கு அதிகாரம் இருக்கலாம். ஆயினும் அந்த அதிகாரம் அரசனின் விருப்பை-வெறுப்பைச் சார்ந்ததாக இருக்கக்கூடாது. அரசு, பொது; நாட்டு மக்கள் அனைவருக்கும் பொது; ஆள்வோரின் பகைவருக்குக்கூட உரிமையுடையது. ஆள்வோர் விருப்பு-வெறுப்பு உடையவராக