பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/455

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



443


பல ஆண்டுகளாகத் தமக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ்ந்தவர். அதனால் அவரை உலகு பாராட்டியுள்ளது. நாமும் பாராட்டுவோம் வள்ளுவர் வழியை எண்ணி!

இன்ப அன்பு
அடிகளார்
73. கயமை சாடு

இனிய செல்வ,

இன்று நாட்டில் கயமைத் தனம் வளர்ந்து வருகிறது. கயமை என்றால் என்ன? கடமையை முறையாகச் செய்யாமை. வேலை செய்வதில் விருப்பமின்மை, ஊதியம் வாங்கும் பணியை முறையாகச் செய்யாமல் வேறு பல சுய சம்பாத்தியங்களில் ஈடுபடுவது, கையூட்டுகள் பெறுவது., கையூட்டுகள் பெறுவதன்மூலம் பொது நலனைக் கெடுத்தல்; நன்றி மறத்தல்; அவதூறு பேசுதல்-இன்னும் பல! அடுக்கினால் பெருகும்! இந்தக் கயமைத் தனம் இன்று பெருகி வளர்ந்து வருகிறது! அப்பட்டமான நிர்வாணமான சுயநலம்! காரியம் நிறைவேற வேண்டுமானால் அழைக்காமலே சந்திக்க வருவர். கடிவாளம் என்றால் மட்டும் ஐயோ பாவம்! இவர்களும் மனிதர்களா?

இன்று எங்குப் பார்த்தாலும் கயமைத்தனம் மேனி மேலோங்குகிறது. நாளுக்கு ஒரு கொலை! நாழிகைக்கு ஒரு திருடு! நாளொன்றுக்குப் பல விபத்துக்கள்! நாடு நகர்வதில்லை! இனிய செல்வ, இவர்களைத் திருத்துவது யார்? திருத்த முடியுமா? திருத்தமுடியும் என்ற நம்பிக்கை திருவள்ளுவருக்கு இருந்தால் ஏன் கயமை என்றே அதிகாரம் ஒன்றமைத்து ஓதுகிறார்? கயமை அதிகாரத்திலும் கயவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையைத் திருவள்ளுவர் தரவில்லை!

இனிய செல்வ, கயவர்கள் சுயமாகவும் சிந்திக்க மாட்டார்கள்! சொன்னாலும் கேட்கமாட்டார்கள்,