பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/457

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



445


மறப்பது. மறப்பது மட்டுமல்ல-உண்ட வீட்டுக்குத் தீமை செய்தல்! பலகாலும் பழகினால்கூட அந்நியர் போல நடந்து கொள்வது! இன்ன பிற கயமைத்தனங்கள்! வீட்டைக் காவல் செய்ய அமைத்தால் வீட்டையே திருடுவது! கோயில் பூசை செய்வோர் சிலை திருடி விற்பது! நாட்டுப் பணியில் அமர்த்தினால் நாட்டையை விலை பேசுவது! சுயநலத்திற்குப் பொதுநலத்தைக் கெடுப்பது! இன்ன பிறவும் கூட கயமைத் தனங்களேயாம்! இனிய செல்வ., இன்றைய நாடு எப்படி இருக்கிறது? நாளும் கயமைத்தனம் வளர்ந்து வரவில்லையா? "ஆம்" என்கிறாய்! அப்புறம் ஏன் சும்மா இருக்கிறாய்?

இனிய செல்வ, உன்னையும் சுயநலம் ஆட்கொண்டு விட்டதா? கோழையாக்கி விட்டதா? ஏன் மெளனம்? மெளனத்தைக் கலை! விழித்துக் கொள், போராடு! போராடு! நாட்டில் வளர்ந்து வரும் கயமைத்தனத்தை எதிர்த்துப் போராட ஆயத்தமாகு! என்ன, சாவுதானே வரும்? இந்த உலகில் சாகாமல் வாழ்ந்தவர் யார்? அவமானத்தைத் தூக்கிச் சுமந்து வாழ்வதைவிட சாதல் நல்லது. மக்கள் நலனுக்காகப் போராடிச் சாகும் சாவை-உளதாகும் சாக்காட்டை வாழ்த்தி வரவேற்போம்!

இன்ப அன்பு
அடிகளார்
74. தோழமையைத் தேடுவோம்

இனிய செல்வ!

நம்மனோர் வாழ்க்கையிலும்-நம்மை அறியாது திருக்குறள் தத்துவம் இடம் பெற்றுவிடுகிறது. அதுதான் ஊழோ! இனிய செல்வ! ஊழில்கூட நம்பிக்கை வந்து விட்டதா என்பது உன் கேள்வி! ஊழ்த் தத்துவத்தில் நமக்கு என்றும் நம்பிக்கை உண்டு. ஆயினும் ஊழைப்பற்றிய இலக்கணத்தில் நமக்கு மாறுபாடு உண்டு! மேலும் "ஊழ் வெற்றிபெற இயலாதது" என்று கூறப்பெறுவதையும் நாம் ஏற்பதில்லை! ஊழ்-மனிதனுடைய பழக்க வழக்கங்களில்