பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/459

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



447


போர்த்தப் பெற்றது. நமது உறுப்பினர்களுக்கும் ‘பொன்னாடை’ போர்த்தப் பெற்றது. இனிய செல்வ,

"பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை”

என்று திருக்குறள் கூறும் இலக்கணப்படி தே.கண்ணன் அவர்களும் கலைவாணி சீனி திருநாவுக்கரசு அவர்களும் பொறுத்து ஏற்றுக் கொண்டு இன்முகங்காட்டியது அன்றைய இராமனை நினைவூட்டியது. திருக்குறள் மரபுநெறி ஏற்றுப் போற்றல் என்பது உயர் பண்பல்லவா?

இனிய செல்வ, திருக்குறள் நட்பியல் பற்றி நிறைய ஆய்வு செய்திருக்கிறது. நம்மையும் ஆய்வு செய்யும்படி வற்புறுத்துகிறது. ‘நட்பாராய்தல்’ என்றே ஒரு அதிகாரம்! ‘தீ நட்பு’ என்றும் ஒரு அதிகாரம்! இவ்வளவும் கூறியபின் 'பழைமை’ என்று ஒரு அதிகார அமைப்பு ஏன்? நாம் என்ன முற்றறிவினரா? இல்லையே! நமக்கும் சில எதிர்பார்ப்புக்கள் உண்டல்லவா? அவ்வழி யாரோடாவது நட்பு ஏற்பட்டு விடலாம்! காலம் போகப் போக அந்த நட்பில் மாறுபாடு தோன்றலாம். என்ன செய்வது? பழகிய நட்பில் பிரிவுகளைத் தவிர்ப்பதற்குத் தான் பழைமை அதிகாரம். நண்பரும் தவறு செய்யலாம். அல்லது நாமேகூட நன்று-தீது ஆராயும் அறிவில் சோர்வுபட்டு நல்லனவே செய்யும் நண்பரைக் கூட வேறாகக் கருதலாம் அல்லவா? இந்த மாதிரி சமயங்களில் நட்பினை நிலைநிறுத்தப் பழைமை பாராட்டல் என்ற பண்பு பயன்படும்! இனிய செல்வ, இன்று நாட்டில் நட்பியல் இருக்கிறதா என்பதே கேள்வி! மனிதன் விரைந்தோடுகின்றான்! அவனுக்குத் தெரிந்தவர்கள் உண்டு; அறிமுகமானவர்கள் உண்டு. நண்பன் உண்டா? நீயே கேட்டுப் பார்!

நட்புக்கு ஈடான சொல் தோழமை என்பது. நட்பு, நண்பன் என்ற சொற்களைவிட தோழமை, தோழன் என்ற சொற்கள் ஈர்ப்புள்ளவையாக உள்ளன. சேக்கிழார் அறிமுகப்படுத்தும் சொல் ‘தோழன்’ என்ற சொல்லாகும். ருஷ்யப்