பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/462

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

450

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இனிய செல்வ, இப்படி ஒரு "கும்பல் நாகரிகம்” நமது நாட்டில் வளர்கிறது! இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அடக்குவாரின்றித் திருவிளையாடல்கள் செய்கின்றனர். நாழிகைக்கு ஒரு கொலை; நாளுக்கு ஒரு கொள்ளை என்று வளர்கிறது. பயணம் செய்வோருக்குப் பாதுகாப்பு இல்லை! வெடி குண்டுகள் தாராளமாக நாட்டில் புழங்குகின்றன. அமைதிப் பூங்காவாக, செல்வக் களஞ்சியமாக இருக்க வேண்டிய நாட்டில் இந்த அவலம் ஏன்? பொது மக்கள் இப்போது எதைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. படித்தவர்கள்-சராசரி வளர்ந்தவர்கள் தன் பெண்டு, தன் பிள்ளை, என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஒரு சிலருக்கு அச்சம். பயம்! எல்லாரும் விதுரர், துரோணர், பீஷ்மர் போல வாழ்கின்றனர்.

இனிய செல்வ, நமது நாட்டில் இன்று நேற்றுத் தோன்றியதல்ல. இந்த நிலை! மகாபாரத காலத்திலேயே துச்சாதனன் துடுக்குத் தனத்தைத் தட்டிக் கேட்க ஆளில்லையே! பாஞ்சாலியை அரசவையில் துகிலுரியும் பொழுது கணவன்மார்கள் கூடக் கையறு நிலையில் நெட்டை மரங்கள் என நின்றனர்! மிகப் பெரிய அறிஞர்களாகிய விதுரர், துரோணர், பீஷ்மர்கூட வாய்திறக்க மெளனம்! மெளனம்! ஏன்? பாண்டிய நாட்டில் கண்ணகிக்கு ஏற்பட்ட கொடுமை கண்டு மக்கள் கொதித்து எழுந்தனரா? இல்லை! அதனால்தானே கண்ணகி மதுரையை எரிக்கின்றாள்!

வரலாறு தொடர்கிறது; அவ்வளவுதான். அன்றெல்லாம் முடியரசு! இன்று மக்கள் அரசு! இன்று மக்கள் தட்டிக் கேட்கலாம்! கேட்கவேண்டும்! ஆனால் கேட்கமாட்டார்கள். இனிய செல்வ, இன்று விருப்பம்போல் நடப்பவர்கள் எண்ணிக்கை கூடுகிறது. மக்களே போல் நடமாடித் தீமைகள் செய்கின்றனர். இது கயமை உலகம்!

"தேவரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்!’