பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/469

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



457


செய்வதில்லை, அதேநேரத்தில் ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்று காத்திருக்கிறார்கள்! இவையிரண்டும் உண்மை. இனிய செல்வ, இந்தியா வளர வேண்டுமாயின் நமது பொருளாதார அமைப்பு திருக்குறள் நெறியில் அமைய வேண்டும். இனிய செல்வ, நாட்டின் நலன் கருதியும், அடுத்த தலைமுறையின் நலன் கருதியும் வரவு செலவு திட்டமிடப்படுதல் வேண்டும், தேர்தல் வெற்றி கருதிய வரவு செலவுத் திட்டம் நாட்டின் நலனை முற்றாகக் காத்தல் இயலாது. இனிய! அடுத்த கடிதத்தில் மேலும் எழுத எண்ணம்!

இன்ப அன்பு
அடிகளார்
78. குடியாண்மை

இனிய செல்வ,

நாடு விடுதலை பெற்று 47 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆயினும் வறுமை அகன்றபாடில்லை. ஏழ்மை நீங்கவில்லை. ஏன்? தலைக்குமேல் கூரை இருக்கிறதோ இல்லையோ வறுமைக்கோடு இருக்கிறது. இன்று நமது நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் 58.9 விழுக்காடு. இந்த அவலம் எப்போது அகலும்?

இனிய செல்வ, இன்று நம்மிடையில் குடியாண்மை குடிகொள்ளவில்லை! அப்பட்டமான நிர்வாணச் சுயநலம்! நமக்குத் தெரிந்த அறிமுகமான ஒருவர் பணப் பிசாசுதான்! பணம் என்றால் பலவும் செய்வார். பணம் பெறுகிற வரையில் நன்றாகப் பழகுவார். அப்புறம் தேடி அலைந்து தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு வழியிலா, பல வழிகளிலும் பொருள் ஈட்டுவார். பெறுவதோ அரசுச் சம்பளம். அரசின் வேலை செய்வதே இல்லை! சொந்தத் தொழில்கள் பலப்பல! ஐயோ, இவர்களுக்குச் சமூக உணர்வு பற்றிக் கவலை இல்லை. இத்தகைய பணப்பூதங்கள் நடமாடுவதால் ஒப்புரவாண்மை கெடுகிறது.