பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



35



ஆர்வம் என்பது முறுகி வளர்வது. அன்பு, ஆர்வத்தைத் தருகிறது. ஆர்வம் நட்பைத் தருகிறது. அன்பு நிறைந்த பழக்கத்திலே தோன்றி ஆர்வத்தினால் வளர்க்கப்பெற்று நட்பு என்ற நிலையை அடைகிறது. நட்பு நிலைக்கு இணையான வாழ்க்கை நிலை-உறவு இந்த உலகிலும் இல்லை; வேறு எந்த உலகிலும் இல்லை.

நட்புக்கு மறுபெயர் தோழமை. நட்பு இதயத் துய்மையுடையது. நட்பு எல்லையற்றது; அழிவற்றது. அதனால் திருவள்ளுவர் "சிறப்பு” என்று சிறப்பித்துக் கூறுகிறார். "சிறப்பு” என்ற சொல் உயர்வற உயர்ந்த உயர் நலத்தைக் குறிப்பதாகும். அதுவும் எத்தகைய சிறப்பு? எளிதில் நாடிப் பெறுதலுக்கு இயலாத சிறப்பு!

"அன்புஈனும் ஆர்வ முடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு”

(74)

இத்திருக்குறள் உளவியல் வாய்ப்பாட்டில் அமைந்தது. உளதாகிய அன்பு வளரும். அன்பு வளர்ந்தால் ஆர்வம் என்ற உள்நெகிழ்வைத் தரும். ஆர்வம் தன்னை மறக்கச் செய்யும். பழகுவோரின் இயல்பறிந்து அவர் தம்முடன் விருப்பத்துடன் பழகி நட்பினை அடைய வளர்த்து உயர்த்தும்.

அன்புக்கும் நட்புக்கும் இடையில் இணையாக இருப்பது ஆர்வம். ஆர்வத்தினை உளவியலார் Aptitude என்பர். தமிழிலக்கியம், பாங்கு என்று கூறும்.

9. அன்பு செய்க!

இறைவன் உயிர்க்குலத்திற்குக் கொடுத்த ஒரே ஒரு வரம் அன்புதான். அன்பே உயிர்க்குலத்தின் வளர்ச்சிக்கு ஊற்று; அன்பே உயிர்க்குலத்தின் பாதுகாப்புக் கவசம், மானுடத்தில் உயிரியல் அடிப்பண்பு விரிந்து, வளர்ந்து