பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/472

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

460

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இனிய செல்வ, ‘குடி செயல் வகை’ என்று திருக்குறளில் ஒர் அதிகாரம் உள்ளது. இனிய செல்வ, ஏதாவது ஒரு காரியம் செய்ய நாள் பார்த்துக் காத்திருத்தல் பருவம் பார்த்தலாகும். இந்த உலகில் விரைந்து செல்லக்கூடியது காலம்! காலம் யாருக்காகவும் காத்திருக்காது. இழந்தாலும் திரும்பி வராது; கிடைக்காது. இனிய செல்வ, இளமை எத்தனை நாளைக்கு? நம் ஒவ்வொருவருக்கும் வரையறுத்த வாழ் நாள் எவ்வளவு? அதோ பார்! நமக்கு முன்னால் போய்க் கொண்டிருக்கிறார்கள்! நெடுந்துாரம் போவானேன்? தமிழ்க்கொண்டல் அருளரசு கிருபானந்தவாரியார் பம்பாய்-சென்னை விமானத்தில் ஏறினார்! சென்னையில் இறங்கவில்லை! அவருடைய பூதவுடல் இறக்கப்பட்டது. கடிகாரம் டிக், டிக் என்ற ஒலியுடன் நகர்கிறது! இல்லை! நமது உயிரை மரணத்தை நோக்கி நகர்த்துகிறது! நாம் பேருந்து, விமானப் பயணத்திற்குச் சுறுசுறுப்பாக இருப்பது போலவே கடைசிப் பயணத்திற்கும் சுறுசுறுப்பாய் இருப்பது நல்லது. இனிய செல்வ, என்ன பொருள்? “காலம் போற்று! கடமைகளைச் செய்!” என்பதே. நீ பிறந்த குடிக்கு நன்மை செய்! நீ பிறந்த குடியை வளர்ப்பாயாக! உன் மொழியை வளர்த்திடு! கடமையை வேள்வியாகச் செய்! நாளை நாளை என்று ஒத்திப் போடாதே! நல்ல நாள் என்று ஒன்று இல்லை! கடமை வேள்வியை, உழைப்பு நோன்பை இயற்றுபவருக்குப் பிறந்த குடிக்குரிய பணிகளைச் செய்பவருக்கு ஒவ்வொரு நாளும் நல்ல நாளே! பருவம் பார்க்காதே!

இனிய செல்வ, வாழும் வாழ்நாள் சிலவே! பாலப் பருவம் தாயின் மடியில் கழிகிறது! விளையாட்டில் போகிறது! கற்பதில் கரைகிறது! நாம் மனிதனாகிச் செயல் செய்வதற்குரிய காலம் - சுதந்திரமான காலம் பதினெட்டு வயதில் வருகிறது! இது உலக நியதி! வாழும் காலம்-செயல் செய்யும் காலம் பொதுவாக 40 வயது வரை தொடர்கிறது. இந்த காலமே இளமைக் காலம் ! ஒரு சிலருக்கு 50-60 வயது வரையில் கூடச் செயல் செய்யும் காலம் தொடரலாம்.