பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/473

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



461


இனிய செல்வ, பதினெட்டு முதல் நாற்பது வயதுக்குட்பட்ட இடைக்காலம் ஒவ்வொருவர் வாழ்விலும் பொற்காலம்! ஆவேசமாகச் செயல் புரியும் காலம் ! புவியை நடத்தக்கூடிய பொற்காலம்!

உயிரியற்கை சுறுசுறுப்பேயாம். மனிதனே சோம்பலைப் படைப்பவன்! விதி, வினை, நல்லநாள், கெட்டநாள், சூழ்நிலை என்றெல்லாம் பல காரணங்கள் கூறிக் கடமைகளை ஒத்திப் போடுதலே சோம்பல்! பொழுது போக்கு அரட்டை அடித்தல் முதலியன சோம்பலை வளர்ப்பன. புகழ், இலாபம், கடினம், ஒத்துழைப்பில்லை என்ற சொற்கள், இச்சொற்கள் வழி உணர்த்தப்பெறும் பொருள் முதலியன சோம்பலுக்கே சுருதி கூட்டுவதாகும். சோம்பல் மானத்தின் பகை! ஆக்கத்தின் பகை! வாழ்க்கைக்கு ஒரு புற்றுநோய்! இனிய செல்வ, சோம்பல் என்றால் ஒன்றுமே செய்யாதிருத்தல் என்று கருதிவிடாதே! இந்த உலகில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைச் செய்வர். சிலர் இரண்டு, மூன்று கூடச் செய்யலாம், அதுவல்ல கருத்து! நம் ஒவ்வொருவருடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் இசைந்தவாறு பொருந்தும் அளவுக்குப் பணி செய்தல்வேண்டும், நம்முடைய நேரத்தில் ஒரு நொடிப் பொழுதோ அல்லது ஆற்றலோ வறிதே கழியக்கூடாது. எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டும். எல்லை, மனம் அல்ல! இலட்சிய நோக்கு! இலட்சிய நோக்கு விரிவடைந்தால் அறிவு அகண்டமாகும்! ஆற்றல் ஊற்றெனப் பெருகும். இனிய செல்வ, சோம்பலை உதறித் தள்ளி எழுந்து நில்! விழிப்புடன் நில்! உன் வாழ்நாளைக் களவு கொடுத்து விடாதே! உன் முறுக்கேறிய தசைகள் தளரும் முறையில் அறிவறிந்த ஆள்வினை செய்! நீ, பிறந்த குடியின் மேம்பாட்டுக்குரிய பணியைச் செய்க!

இனிய செல்வ, நாம் பிறந்த குடியை வளர்த்தாக வேண்டும்! நாம் பிறந்த குடி என்ன நம்மை வரவேற்கப்போகிறதா? அம்மம்ம, ஒரு குடிப்பிறந்தாருள்ளும் அழுக்காறு