பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/477

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



465


வேண்டும். இனிய செல்வ, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்தில் குன்றக்குடிப் பகுதியில் பெருமழை! போக்கும் மடையைத் தூர்ந்துபோகும் அளவுக்கு யாரும் கவனிக்கவில்லை. வெள்ளம் வந்தவுடன் தான் கவனம். மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையில் இரவு 10 மணிவரையில் செய்ய வேண்டியதாயிற்று. இப்படித்தான் எல்லா இடங்களிலும்! அதுபோலவே ஆண்டுதோறும் கண்மாய்க் கரைகளின் அறுத்தோடிகள், மண் அரிப்பால் தாழ்ந்து போதல் போன்றவைகளைக் கவனித்து இருந்தால் நாங்களே மூன்று மாதத் தண்ணீர் கூடுதலாகச் சேமித்திருக்க முடியும். இந்த வேலைக்கு என்று நாளும் ஒதுக்கப்படுகிறது! இனிய செல்வ, எந்த நாள்? மதுரை ஆலவாயண்ணல் வைகை வெள்ளம் அடைக்க மண் சுமந்தாரே அந்த ஆவணிமூல நன்னாள்! அதுவும் சொல்லிவைத்தாற்போல் இந்த ஆண்டு நடைபெறவில்லை! ஏன்? இனிய செல்வ, நம்மையே கேள்வி கேட்கிறாயே! ஒரு அஞ்சலட்டை எழுது! து.ச.கணேசக் குருக்கள், சி.மருதுபாண்டியன், சுப.செல்வராஜ் ஆகியோருக்கு! எல்லாரும் குன்றக்குடிதான் (623 206)! எழுதிப்பார்!

இனிய செல்வ, பெய்யாமல் மழை கெடுக்கலாம். ஆனால், பெய்து கெடுப்பது என்பது மழையின் குறையல்ல! ஓர் ஆண்டு பெய்யாத மழை அடுத்த ஆண்டு சேர்த்து வரும். வானம் சேர்த்துப் பெய்து பயன் என்ன? தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்தும் முயற்சியில்லையே!

சங்க காலத்துக் கவிஞன் கூறினான் தண்ணீரைத் தேக்கி வைக்கும் அரசு வளரும், வாழும் என்று!

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

இரண்டுமே மழையின் குற்றமல்ல - மக்களின் குற்றமே!

மழை வளம் காக்க மண் வளம் காத்தல் வேண்டும். நிலமகள் பசிய சோலைகளால் புனைவு பெற்றால் புவி

தி.31.