பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/482

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

470

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருக்கவும் முடியாது. இனிய செல்வ, இந்தியாவில் விலையேற்றம் இந்திய மக்களில் பெரும்பாலோராகிய நடுத்தர வர்க்கத்தைப் பாதிக்கிறது. மாதம் ஒன்றுக்கு ஆயிரக் கணக்கில் ஊதியம் வாங்கும் ஓர் அரசு அலுவலர் கூட இன்று ஏழை போல ஒரு வேளை உண்டும் ஒரு வேளை உண்ணாமலும் வாழும் நிலையில் உள்ளனர். ஏழைகளின் நிலையை எழுதிக் காட்ட வேண்டுமா?

இனிய செல்வ, மயில் இறகுகள் கனமில்லாதன. எடைகுறைவு. அதனால் ஒரு வண்டியில் மயில் இறகுகளை ஏற்றும்பொழுது அந்த வண்டி சுமக்கக்கூடிய அளவுக்கே ஏற்றவேண்டும். கனமில்லாதன என்ற நினைப்பில் அளவுக்கு அதிகமாக ஏற்றினால் ஏற்றப்பட்டது மயிற் பீலியேயானாலும் வண்டியின் அச்சுமுறியும். அதுபோலத்தான் விலை ஏற்றம்! இவ்வளவுதான் அவ்வளவுதான் என்று சமாதானம் கூறிக்கொண்டு விலையை ஏற்றிக்கொண்டே போனால் நடுத்தர மக்கள் அல்லற்படுவர்; ஏழை மக்கள் துன்புறுவர். எல்லை கடக்கும் நிலையில் மக்கள் கொதித்து எழுந்து ஆட்சியின் அச்சையே முறித்துவிட முனைவர். இதுதான் நேற்று வரை நடந்த வரலாறு. அரசுகள் படிப்பினையை ஏற்பது நல்லது.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

(475)
இன்ப அன்பு
அடிகளார்
83. சூது

இனிய செல்வ,

திருவள்ளுவர் 'சூது’ என்று ஓர் அதிகாரமும் வகுத்து எழுதியுள்ளார். சூதாட்டத்தின் வரலாறு அல்லது சூதாட்டத்தின் கொடுமை நீ கேட்டிருப்பாய் என்றே நம்புகின்றோம்.