பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/484

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

472

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இனிய செல்வ, இன்னொரு பயங்கரமான சூதாட்டத்தை அரசுகள் நடத்துகின்றன. அது என்ன சூது, என்றா கேட்கிறாய்? அதுதான் லாட்டரிச் சீட்டு! ஆசை தீது! அதிலும் பொருளாசை கொடிது! ஆசை யாரை விட்டது! இனிய செல்வ, ஆம்! உண்மை நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை! பொருளில்லார்க்கு, இவ்வுலகம் இல்லை என்பது உண்மைதான்! இனிய செல்வ, பணத்தை விரும்புவது. பணத்தைச் சம்பாதிப்பது தவறல்ல! ஆனால், பணத்தை நேரிடையாக விரும்பாமல் பணம் வரும் வாயில்களை, உழைப்பை, தொழிலை விரும்பி முயன்று உழைத்துப் பணம் ஈட்ட வேண்டும். இதனைத் திருக்குறள் "இயற்றல்” என்று குறிப்பிடுகிறது. இனிய செல்வ, இன்று அரசுகளும் சரி, தனியார்களும் சரி, பண ஆசை பிடித்து அலைகின்றனர். முயற்சி நடக்கிறது. இனிய செல்வ, அரசுக்குப் பணம் தேவை. அரசின் பணத்தேவைக்குக் குடிமக்களின் பணத்தாசையைக் கருவியாகக் கொண்டு பரிசு என்ற பெயரில் சுரண்டப்படுகிறது. பணக்காரர்கள் நூற்றுக்குத் தொண்ணுறு பேர் பரிசுச் சீட்டுகள் வாங்கமாட்டார்கள். பரிசுச் சீட்டுகள் பெரும்பாலும் ஏழைகள் தான் வாங்குகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஏழைகள், நடுத்தர மக்கள் வாங்குகிறார்கள். இனிய செல்வ, நமக்குத் தெரிந்தவர் ஒருவர் ஏழை தான்! போதிய வருவாய் இல்லை என்பதும் உண்மை தான்! ஆனால் அவர் சீட்டுகள் வாரியாகப் பல சீட்டுகள் வாங்குகிறார்; நூற்றுக் கணக்கான ரூபாய்க்கு வாங்குகிறார். ஆனால் அவர் பக்கம் அதிர்ஷ்டக் காற்று அடிக்க மறுக்கிறது. இனிய செல்வ, கிடைக்கும் வருவாயைக் கொண்டு சரியாக உண்ணாமல், அழகாக உடுத்தாமல், ஐயோ பாவம் சீட்டுகளை வாங்குகின்றார். "இன்றில்லையானாலும் நாளை கிடைக்கும்” என்ற நம்பிக்கையிலேயே வாங்கிக் கொண்டே இருக்கிறார். பரிசுச் சீட்டுக் குலுக்கல் அன்று இவருக்கு வேலை ஓடாது! பரிசு விழாத ஏமாற்றத்தினால் வேலை