பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/499

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



487


இன்று நல்லதாக இருக்கலாம். ஆனால் நெடிய கால நோக்கில் பார்த்தால் மக்கள் அவலப்படுவார்கள். மக்கள் விருப்பம், ஆட்சியாளர்கள் விருப்பம் நீதித்துறை இவைகளுக்கிடையில் மோதல் ஏற்படுமாயின், மாறுபாடுகள் தோன்றின், உடன் அந்தக் குறிப்பிட்ட செய்திபற்றி மக்கள் கருத்தறிய, கருத்துத் தேர்வு நடத்தலாம். அல்லது முத்தரப்பினரும் அடங்கியவர்களின் குழு ஒன்று நியமித்து, மக்கள் கருத்தறிந்து, அறிக்கை தரச்செய்து நடைமுறைப்படுத்தலாம். அப்படித்தான் அம்பா சங்கர் அவர்கள் ஒரு நபர் கமிஷன் நியமிக்கப்பட்டது. அவர் அந்த அறிக்கை தயார் செய்து தந்தார். அந்த அறிக்கை ஆட்சியாளருக்குப் பிடிக்காததால் அதை வெளியிடவும் இல்லை; நடைமுறைப் படுத்தவும் இல்லை.

இனிய செல்வ, நமது நாட்டு ஆட்சிமுறை மூன்று அமைப்புக்களைக் கொண்டது. முதல் அமைவு பாராளுமன்றம், சட்டமன்றம், அமைச்சரவை ஆகியன. இவை அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கைகளை நிர்ணயிக்கும். இரண்டாவது நிர்வாக இயந்திரம்-அதிகார வர்க்கம், இந்த அமைவின் பொறுப்பு அமைச்சரவையின் கொள்கைகளையும், திட்டங்களையும் நடைமுறைப் படுத்துவது; நிறைவேற்றுவது! மூன்றாவது நீதித்துறை! இதன் பணி முதல் இரண்டு அமைவுகளின் செயற்பாடுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி வழங்குவது. இந்த மூன்று அமைவுகளுக்கும் தனித்தனியே கடமைகளும், அதிகார வரம்புகளும் நிர்ணயிக்கப் பெற்றுள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இரண்டாவது, மூன்றாவது அமைவுகளின் உரிமைகள், அத்து மீறல் செய்யப்படுகின்றன. முதல் அமைவே சர்வமும் ஆகத் துடிக்கிறது. இனிய செல்வ, இந்தப் போக்கு ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்து விடும். நமது நாட்டில் வளர்ந்து வரும் கட்சி மனப்பான்மை மிகவும் கசப்பாக இருக்கிறது. கட்சிகளுக்கிடையில் சண்டைகளே நடக்கின்றன. ஆளும் கட்சியைச் சாராதவர்களை அந்தியர்