பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/501

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



489


ஊருக்கு அறிவித்திருக்கிறது; உலகத்திற்கு அறிவித்திருக்கிறது. தொலைக்காட்சியில் வேறு சூரத் நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப் படுத்துவதைக் காட்டுகிறார்கள். பல நாள்களாகச் செய்தும் இன்னமும் அள்ளி முடியவில்லையாம்! ஏன் இந்த அவலம்? நடைபெற்றுக் கொண்டிருந்த நகராட்சி, அன்றாடக் குப்பைகளை அள்ளி, கழிவுநீரை அகற்றி நகரைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்பது தானே பொருள்!

இன்று இத்தகைய அசிரத்தை நமதுநாடு முழுவதும் துறைதோறும் பரவிக்கிடக்கிறது; பரவிக்கொண்டு வருகிறது. இனிய செல்வ, நம்மவர்களைப் பீடித்துள்ள இந்த அசிரத்தை என்பது பிளேக்-கை விடக் கொடிய நோய்! அசிரத்தையால் பணிகள் முறையாக நடப்பதில்லை. ஆனால் வாழும் ஆசை யாரை விட்டது? வாழும் ஆசையும் சிரத்தையும் கூடினால் வாழலாம்! வாழ முடியும்! அசிரத்தையுடையவர்கள் வாழ்தல் அரிது! பிழைப்பு நடத்த முயல்வார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் கையூட்டு, கொள்ளை முதலியன நிகழ்கின்றன!

இனிய செல்வ, நோய்,-காரியம்! நிகழும் காரியங்களுக்குப் பரிகாரம் தேடிப் பயனில்லை. இந்தப் பரிகாரங்கள் நிரந்தரமாகா. நிரந்தரமான பரிகாரம் காணவேண்டின் நோயின் காரணங்களைக் கண்டறிய வேண்டும். நோயின் காரணங்களையே மாற்ற வேண்டும். இன்று நமது சமுதாயத்தில் நோய் பரவலாகி விட்டது. தவறுகளை நியாயப்படுத்தும் திறன் வளர்ந்து வருகிறது. எங்கும் அசிரத்தை! செய்யும் பணிகளின் பயனுக்கு உத்தரவாதம் இல்லை! இந்தச் சமூக வாழ்க்கை முறை பிளேக்-கை விடக் கொடியது!

இனிய செல்வ, வெற்றிகள் நிலையானவை அல்ல. வெற்றி நிலைபெற்று நம்பாலதாக இருக்க வேண்டும் எனில், தொடர்ந்து விழிப்புணர்வுடன் கூடிய முயற்சி வேண்டும்.