பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/504

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

492

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மரியாதை செய்வது என்ற பெயரில் அவர்களுடைய மதிப்பைச் சீர்குலைப்பதாகும். இனிய செல்வ, மதுரையில் வ.உ.சி. சிலை ஒன்று சிம்மக்கல் பக்கம் நிற்கிறது. இனிய செல்வ, சிலைக்கு அடியில் சிலை நிறுவியது "சைவ வேளாளர் சங்கம்" என்று எழுதப் பெற்றுள்ளது. வ.உ.சி.க்கு வரலாற்றில் நிலைத்த புகழுண்டு. வடபுலத்தில் பாலகங்காதர திலகரைப் போல் தென்புலத்தில் வ.உ.சி. ஆங்கில சாம்ராஜ்யத்தின் வர்த்தகக் கப்பல்களை எதிர்த்து, சுதேசிக் கப்பல் விட்டு வெற்றி கண்ட பெருந்தகை. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வ.உ.சி.க்கு நிலையான இடம் உண்டு.

இனிய செல்வ, பசும்பொன் தந்த தேவர் திருமகன் என்று பாராட்டப் பெறும் முத்துராமலிங்கத் தேவர் தேசியத் தலைவர்; தெய்வீக நெறியில் தோய்ந்த தலைவர்; வீரர்; ஆற்றொழுக்காகப் பலமணிநேரம் தத்துவ மெய்ப் பொருள் பேசும் ஆற்றல் மிக்கவர். அவர் ஒர் ஆன்ம ஞானி; தேவர் திருமகனாரையும் சாதித்தலைவர் ஆக்க முயன்று வெற்றியும் பெற்று வருகின்றனர். இது தேவர்; திருமகனாரின் புகழுக்கு அணி சேர்க்குமா? என்பது குறித்து அன்பர்கள் சிந்திக்க வேண்டும். இனிய செல்வ, திருவள்ளுவரையும் வள்ளுவப் பண்டாரக்குலத்தில் தோன்றியவர் என்ற செய்தி பரப்பப்படுகிறது.

வளரும் சமுதாயத்திற்குச் சாதிகள்-களைகள். களைகள் நிறைந்த கழனியில் பயிர் வளராது. இனிய செல்வ. அதுபோலச் சாதிப்புன்மைகள், வேற்றுமைகள் வளரும் மனிதக் கூட்டத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்னியமாகி விடுவர். மனிதக் கூட்டத்தில் வாழும் ஒவ்வொருவரும் சமூகம் உருவாகத் துணையாக அமைய மாட்டார்கள். ஒருவருக்கொருவர் கடமைப் பொறுப்பு இருப்பதை உணரார், இந்த நிலையில் கூடி வாழ்தல் எனும் பண்பு அரிதாகிவிடும். காலப்போக்கில் தமிழரும் இல்லை, இந்தியரும் இல்லை என்றாகிவிடும். இனிய செல்வ, இந்தியா அந்நியருக்கு அடிமையானது ஏன்? எப்படி? வீரம் இல்லாமலா? விவேகம்