பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/509

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



497


பழகி, நட்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் இரண்டு பேருக்குமிடையே உள்ள இடைவெளி குறையும். இடைவெளி குறையக் குறைய நட்பு வளரும். ஒத்த கருத்துக்கள் உருவாகும். ஆற்றல் பெருகும் ஆக்கம் வளரும்.

இனிய செல்வ, ஜனநாயக வாழ்க்கைமுறை-கூட்டுறவு வாழ்க்கைமுறை எளிதில் உருவாகாது. ஒவ்வொரு மனிதனும் நாள்தோறும் இத்துறையில் தன்னை வளர்த்துக்கொள்ளப் போராடவேண்டும். சினம் என்றும் சேர்ந்தாரைக் கொல்லும். கொடுந் தீமையை வென்றெடுக்க வேண்டுமாயின் பெரும் போராட்டம் தேவை. இனிய செல்வ, அழுக்காறு போன்ற தீமைகளைக் கூட விருப்பு-வெறுப்புக்களைக் கடந்தால்தான் வெல்லமுடியும். மற்றொருவர் என்று ஒருவர் இல்லை. எங்கு நோக்கினும் நீயே! உன்னோடு பிறந்த பட்டாளம்! மானிட சமுத்திரம்! இச்சமுத்திரத்தில் உள்ள தண்ணீரில் வேற்றுமை உண்டா? இல்லையே! மானிட சமுத்திரத்துக்குள் சங்கமமாகி விட்டால் வேற்றுமைகள் அகலும்! ஒருமைப்பாடு கால்கொள்ளும்! எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணும் பெருந்தகைமை, சன்மார்க்க ஒழுக்கம்-தோன்றும். இந்த நிலை கைகூடினால் "யாரோடும் பகை கொள்ளாத” பெரு வாழ்வு அமையும்.

கடவுள் பக்தி உடையவர் என்று விளம்பரம் செய்து கொள்வோருக்கு முதலில் தேவையான பண்பு, வேண்டுதல் - வேண்டாமை யில்லாது ஒழுகுதலாகும். வரலாறு முழுதும் கூர்ந்து பார்த்தால் மதவெறி-ஆதிக்க வெறி இவைகளால் நடந்த கலகங்கள், சண்டைகளே மிகுதி. இன்றும் நம்மை வருத்தும் கொடிய நோய்களான ஆசைகள், விருப்பங்கள், பெருமை பாராட்டல், விளம்பர வேட்டை யாடுதல், பணம் தேடல் இன்னோரன்னவற்றால் இன்றும் மனிதன் பிரிக்கின்றான்; பிரிந்துகொண்டேயிருக்கின்றான்! ஒரு சிலர் ஒன்றாக இருத்தல் போலக் காட்டி வாழ்வில் பிரிந்தே நிற்கின்றனர். இது பெரிய கொடுமை, மாடுகள் மந்தைகளாக வாழ்கின்றன. மனிதன் ஒன்றாகக் கூடி வாழ இயலாதா?

தி.33.