பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/513

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



501



மனித இயற்கை ‘வேண்டும்’ ‘வேண்டாம்’ என்ற குண இயல்புகள் இருப்பது. ஆனால், அவை தம்முடன் வாழ்பவர்களுடன் ஒத்து இருக்கின்றனவா என்று ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ளவோ, தள்ளவோ தவறிவிடின் சமூகம் தோன்றாது; சமூகம் உருக்கொள்ளாது: தனிமனிதனுக்குப் பாதுகாப்பும் உத்திரவாதமும் இருக்காது. காலம் செல்லச் செல்ல மனிதன், பிறிதொரு மனிதனிடத்திலிருந்து அந்நியப்பட்டுப்போவான். அந்நியப்பட்ட நிலையில் சந்தேகம், பயம், அச்சம், உட்பகை, வன்மம் முதலிய தீய குணங்களுக்கு மனிதன் அடிமையாகி விடுவான். அதனாலேயே கடவுள் கூட மற்றவர்கள் விரும்பியதைத் தனக்கு எதிராக அமையும் என்று தெரிந்து அருளிச்செய்கிறான். பத்மாசூரன் கதை, சூரபதுமன் கதை எடுத்துக்காட்டுக்கள்! இனிய செல்வ, பத்மாசூரனும் சூரபதுமனும் சமூகப் பகைவர்களாக மாறின போதுதான் கடவுள் ஒறுக்கின்றார்! இனிய செல்வ, ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வேண்டுதல்களையும் வேண்டாமைகளையும் ஓர் எல்லைக்குள் கட்டுப்படுத்திக் கொண்டால் அல்லது சமுதாய நலன் என்ற ஆதார சுருதிக்கு முரணாமல் அமைத்துக்கொண்டால் நல்லது. சமூகமும் வளரும், வாழும்!

இனிய செல்வ, இன்று எங்கு நோக்கினும் நிர்வானமான சுயநலம்! விளம்பர ஆசை பண ஆசை! இவையெல்லாமாகச் சேர்ந்து இன்று மனித குலத்தின் பண்பாட்டை அரிமானம் செய்து வருகிறது. இந்தப் போராட்டத்திலிருந்து இந்தியாவை - இந்தியர்களை - தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். பத்திரிகை உலகம், திரைப்பட உலகம் இவ்விரண்டும் மானுடம் பண்பாட்டுச்சியில் ஏறுவதற்குப் பயன்படும் ஏணிகள்! ஆனால் இன்று இவை மனித குலத்தின் நாகரிகத்திற்குப் பள்ளங்களைத் தோண்டிக் கொண்டிருக்கின்றன! தரமான நூல்களைப் படிக்கும் போக்கு மக்களிடத்தில் வளர வேண்டும். மேடைகள், இசை அரங்குகள், பொழுதுபோக்கு மையங்களாக மாறக்கூடாது. இசை, கிளர்ச்சியை உண்டு பண்ணவேண்டும். ‘இசை ஒரு