பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/519

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



507


அச்சிட்டு உலகிற்கு வழங்கவேண்டும். தமிழில் தொடர்ந்து ஆய்வுகள் நிகழ்த்தப் பெறுதல் வேண்டும். அறிவியல் புலத்தின் வாயிலாக அறிவியல் நூல்கள் கொண்டு வரவேண்டும். உலகம் முழுதும் வாழும் தமிழ் மக்களுக்குத் தமிழ் கற்பிக்க ஆசிரியர்களைத் தயார் செய்து அனுப்ப வேண்டும். உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், தமிழ் மொழியைக் கற்பதற்குரிய வசதி செய்து தரவேண்டும்.

தமிழ், வளர்ந்தமொழி, இலக்கியம், இசை, கலை, பரதம், மருத்துவம், ஒவியம், சிற்பம் முதலிய பல துறைகளிலும் வளர்ந்த மொழி. அந்தத் துறைகளையும் வளர்க்க வேண்டும்; பேணிக் காக்கவேண்டும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமே இவற்றைச் செய்ய இயலும்; செய்யவேண்டும். இனிய செல்வ, அடுத்து எழுதுகின்றோம்.

இன்ப அன்பு
அடிகளார்
94. வாழும் மானிடத்திற்கு அழகு?

இனிய செல்வ,

மனிதன் ஏன் பிறந்தான்? படைப்பாளியாக விளங்கவேதான்! "வினையே ஆடவர்க்கு உயிரே!” என்று சங்க இலக்கியம் கூறும். மனிதன் தன்னுடைய வளர்ச்சி, வாய்ப்புக்கள், சூழலுக்கேற்ப பணிகளைச் செய்கிறான். அது அவனுடைய கடமை. ஒருவன் 24 மணி நேரம் உயிர் வாழ எத்தனை கோடி மனிதர்களும் உயிர்களும் உழைக்கின்றனர். அதுபோல இன்னும் உழைத்துக் கொடுப்பது கடமை. வாழ்வுவழிக் கடமை. இனிய செல்வ, மின்னியலில் ஒரு தத்துவம் உண்டு. அதாவது குறைவான மின்சாரத்தை அளவாகப் பெருக்கிக் கொடுக்கும் ஒரு கருவி உண்டு. இனிய செல்வ, அதுபோலச் சமுதாயத்திடம் மனிதன் தான் வாழ்வதற்குக் கொஞ்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் தான் எடுத்துக் கொண்டதைப் போலப் பலமடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். இது உலக நியதி. மனிதனை