பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/520

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

508

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விட மற்ற எல்லா உயிர்களும் இந்த நியதியைப் பின்பற்றுகின்றன. தாவரங்கள், விலங்குகள் எல்லாமே மனிதனிடமிருந்து பெற்றுக் கொள்வது குறைவு. இயற்கையிலிருந்து பெற்றுக் கொள்வதும் குறைவு. ஆனால் திரும்பக் கொடுப்பதோ ஏராளம். இனிய செல்வ, அதுமட்டுமா? இவன் தரங்குறைந்தவைகளையே தனக்கு உபயோகமில்லாதவைகளையே தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் தருகின்றான். ஆனால் அவைகளோ மனிதனுக்குத் தரமான நுகர் பொருள்களாக, சுவைபடு பொருள்களாகத் தருகின்றன, ஆயினும் ஆரவாரம் செய்வதில்லை. விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. தாவர உலகத்தில், விலங்குகள் உலகத்தில், பறவைகள் உலகத்தில் பஞ்சமும் இல்லை. பண்டமும் இல்லை; பட்டினியும் இல்லை.

இனிய செல்வ, மனிதனோ பேராசைக்காரன். இந்த உலகத்தையே அவன் சுரண்டுகிறான். இந்த உலகத்தில் உள்ள பொருள்கள் கணக்கற்றவை. உலகம் முழுதும் வயிறார உண்டும் மிஞ்சும். ஆனால் நடைமுறையில் காண்பது பற்றாக்குறை. ஏன்? மனிதனின் பேராசையே காரணம், அவன் சுரண்டுகிறான்; சுருட்டுகின்றான். அதனால் உலகத்தில் இல்லாமை இருக்கிறது. எடுத்துக்கொள்ள விரும்பும் அளவுக்கு உழைக்கவும் மறுக்கிறான். அன்று பதவிகளும் பணிகளும் தொண்டாற்றம் முறையிலேயே அமைந்திருந்தன. நன்றி பெறமாட்டார்கள்; எதிர்பார்க்கவும் மாட்டார்கள். அப்பரடிகள் "என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்றார். சராசரி மனிதனுக்கே இது கடமை. பிறப்பொழுக்கம், வாய்ப்புக்கள் காரணமாகப் பதவிகளில் அமர்பவர்கள். பணி செய்யும் பொறுப்புடையவர்களின் பணி. இவர்களிடம் சமுதாயத்தின் எதிர்பார்ப்பு அதிகம் உண்டு. இனிய செல்வ, சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புகளை உயர்நிலை எய்திய மனிதர்கள் செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்கள். அங்ஙணம் செய்யும்போது அப்பரடிகள் கூறியதைப்போல் அடக்கமாகச் செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.