பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



43


இன்பம் போலக் காட்டித் துன்பம் தரும் இவற்றிற்காகவே மானிடர் போராடுகின்றனர். இன்பம் சமூக நலத்தில் உருவாவது; தோழமையில் வளர்வது; காதலில் நிலைப்பது. எல்லாவற்றிற்கும் அடிப்படை சமூக நலம். நம் ஒவ்வொரு வருடைய உள்ள நலமும் உடல் நலமும் கூட சமூக நலத்தினையே அடிப்படையாகக் கொள்வது.

ஆன்மாவின் உறுப்புக்களான மனம், புத்தி, சித்தம், அகத்துறுப்புக்கள், பிரிக்கப்படாத உறுப்புகள் அகத்து உறுப்புக்களே. இவைகளே அறியும் கருவிகள், அறிவுக் கருவிகளுமாம். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன உடலுக்கு வாய்த்த பொறிகள். இப்பொறிகள் செயலுக்குரியன. அறிவும் செயலும் நிகழும் களம் சமூகம், தானே! ஆதலால் சமூகத்தையும் தனது வாழ்நிலையின் உறுப்பாக எண்ணவேண்டும். உறுப்பாக மட்டுமல்ல. சமூகநலனே இன்பத்தின் ஊற்றுக்களன் என்று கருதி சமூக நலனைப் பேணி வளர்க்க வேண்டும். சமூகத்துடன் பிணக்கிலாத நிலையைப் பராமரிக்க வேண்டும்; நெஞ்சு நெகிழத்தக்க உறவு நிலைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சமூக நலன் எப்போது கெடுகிறது? ஏன் கெடுகிறது? அன்பின்மையின் காரணமாக சமூகத்திலிருந்து தனி மனிதன் அந்நியப் படுத்தப்படுகிறான். அந்நியமான நிலை நன்றன்று. அன்பு அடக்கத்தினைத்தரும். வளர்ந்த அறிவு அடக்கத்தைத் தரும். அன்பின்மையும் அறிவின்மையும் தனி மனிதனைத் தற்சார்புடையவனாக்கி அகந்தைக்காரனாக வளர்த்து விடுகிறது. அறியாமையின் முகட்டில் வாழ்பவர்கள் அகந்தையே வடிவமாக வாழ்வர். இவர்கள் யார் மாட்டும் அடக்கத்தைப் பேணார். பணிவு என்பதே இவர்கள் வாழ்க்கை அகராதியில் இல்லை. ஆர்ப்பரவம் செய்வர். எல்லாரையும் இழித்தும் பழித்தும் பேசுவர். இத்தகு வாழ்க்கைப் போக்கு சமூக நலனைக்கெடுக்கிறது. உள்ளமும்