பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புலன்களில் ஆசைகள் தலைப்படின் அந்த ஆசைகளை அடையப் பொறிகளை இயக்கும் ஆன்மா, அப்போது பொறிகள் மதம் பிடித்த களிறுகளைப்போல் கட்டுப் பாடின்றிச் செயற்படும். இது தவறு, பெரும்பாலும் இச்சை, பொறிவாயிலாகச் செய்திகளாக, பொருள்களாகப் புலன்களுக்குச் செல்லும். புலன்கள், தாம் பொறிவாயிலாகப் பெற்ற செய்திகளை, பொருள்களை இச்சையாக மாற்றி மீண்டும் பொறிகளைத் துரண்டும் அவற்றை அடைந்து அனுபவிப்பதற்காக! ஆதலால், பொறிகளைக் கண்டபடி சுற்றவிடாமல் பாதுகாத்தால் பொறியடக்கம் புலனடக்கம் இரண்டும் ஒருங்கே வந்தனையும். இந்த உயரிய ஒழுகலாறு அமைய வேண்டுமானால் அழகுடையன எல்லாம் ஆராதனைக்கே உரியன, அனுபவிப்பதற்கு அல்ல என்ற கருத்தும், நல்லன வெல்லாம் மற்றவர்களுக்கே என்ற எண்ணமும் தோன்றிடின் பொறியடக்கம் தானே வந்தமையும்; புலனடக்கமும் வந்தமையும். பொறிகள் அடக்கத்திற்குத் திருக்குறள் அற்புதமான ஓர் ஆலோசனை கூறுகிறது. ஆமையை உதாரணமாக வைத்துக் கூறுகிறது.

ஆமை, தனக்கு நலம் பயக்காத சூழல்களில் தனது உறுப்புகளை உள்ளே இழுத்து ஒடுக்கிக் கொள்ளும். தனது நலனுக்கே ஏற்ற சூழ்நிலையில் தனது உறுப்புக்களை வெளியே நீட்டி அனுபவிக்கும். இதுபோல நாமும் நமக்கு நலம் பயக்கக்கூடிய காட்சிகளைக் கண்டு அனுபவிக்கலாம். கேள்விகளை கேட்டு அனுபவிக்கலாம், சுவையானவைகளை உண்டு அனுபவிக்கலாம். நம்முடைய ஆன்ம நலனுக்குப் பயன் தராத செய்திகளில் நம்முடைய பொறிகளை ஈடுபட அனுமதிக்காமல் இழுத்து அப்புறப்படுத்தி விடவேண்டும். ஆமையின் பொறிகளைப் போல் மனிதனின் பொறிகள் அடக்கக்கூடியன அல்ல. பின் என்ன செய்யலாம்? நமது பொறிகளுக்கு நாமே நலம் பயக்கக்கூடிய அனுபவங்களைப் படைத்துக் கொடுக்க வேண்டும்.