பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அழுக்காற்று நெஞ்சமுடையார் நல்லவைகளையும் கூடத் தாம் பெற முயற்சி செய்ய மாட்டார்கள். நல்லவைகளைப் பெற்றிருப்பவர்கள் மாட்டு அழுக்காறு கொண்டு அவர்களுக்குக் குற்றங் குறைகளைக் கற்பித்துப் புழுக்கங் கொள்வர்! பழி துாற்றுவர்.

அதனால் அழுக்காறுடையார் மாட்டு உயர்வு தோன்றவும் இயலாது. உலக மகாகவி ஷேக்ஸ்பியர் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்! எதற்கு? அழுக் காற்றிடம் சிக்கிச் சீரழியாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக!

“O Beware My Lord of Jealousy" என்று கூறுகிறார். "அழுக்காறு நெஞ்சம் பெறுதல் சாதலுக்கு நேரானது" என்பார் காட்டன். ‘Envy will sting itself to death’ என்பது அவர் கூற்று. அழுக்காறு உடையார் தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வதில்லை. சான்றாக ஒரு முடவன் (நொண்டி) தன்னுடைய காலைப் பழுது நீக்கிச் சீரமைத்துக் கொள்ள விரும்புவதில்லை; முயற்சி செய்வதில்லை. அடுத்தவன் கால் முடமாகி விட்டால், தான் நடக்க இயலும் என்று நினைப்பான். இதற்கே அழுக்காறு என்று பெயர்.

தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. "தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை; அடுத்தவனுக்கு அபச குனமாக வேண்டும் என்று நினைத்துத் தன் மூக்கையே அறுத்துக் கொண்டானாம்” என்பர். இத்தகைய அழுக்காறு தீமைகளின் பிறப்பிடம்.

நற்குணம் இம்மியும் இல்லாத இழி பிறவிகளே அழுக்காறுடையராய் இருப்பர். அழுக்காற்றினைத் திருக்குறள் ‘பாவி’ என்றே திட்டுகிறது. இன்று எங்கும் பரவிக் கிடப்பது அழுக்காறேயாம்.

அழுக்காறில்லாத நெஞ்சம் பெறுதல் நல்லொழுக்கத்தின் இயல்பாகும். அழுக்காற்றினை எங்ஙனம் அகற்றுவது? அழுக்காறு வந்தபின் அகற்றுவது கடினம். அழுக்காறு