பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எண்ணத்தலைப்படுதல். இந்த அடிப்படை ஒழுக்கம் தவறக் கூடாது.

பார்ப்பனர்க்குரிய பிறப்பொழுக்கம் குன்றியவர்களைப் பார்ப்பனர் என்று மதிக்காதே!

பார்ப்பனராவார் வேதம் ஓதுதல், ஓதுவித்தல் என்ற தொழிலையே மேற்கொள்ள வேண்டும். மற்றத் தொழில்கள் பார்ப்பனர்க்குரியன அல்ல. மற்றத் தொழில்கள் செய்வாராயின் அந்தந்த இனத்திலேயே அவர்களைச் சேர்க்க வேண்டும்.

‘அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.’

135

அழுக்காறு உடையவரிடம் வளர்ச்சி இல்லை. அதுபோல ஒழுக்கமில்லாதவனுக்கு உயர்வு இல்லை.

அழுக்காறு கொள்ளும் மனம் வளர்ச்சிக்குரிய நெறிகளை நாடாமல் மற்றவர் வளர்ச்சியைக் கண்டு எரிச்சலுற்று அழிக்கும் செயல்களில் ஈடுபடுவதால், அவர் வளர்ச்சிக்குரிய வழிகள் தடைப்பட்டுப் போகின்றன. ஆதலால், மற்றவர் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்க! பாராட்டுக! அவர் வளர்ந்த வகைகளை அறிந்து அந்நெறிகளைப் பின்பற்றுக! இதுவே வளர்ச்சிக்குரிய வழி!

ஒழுக்கம் என்பது உயர்வுக்கு வாயில், ஒழுக்கமில்லாதாரிடம் காலம் வீணாகும். அவர்தம் பொறிகளும், புலன்களும் தீயவழியிலான நுகர்ச்சிகளில் ஈடுபடும். அதனால், உயர்வுக்குரிய வாயில்கள் அடைபட்டுத் தாழ்வுற்றுத் துன்புறுவர்.

ஆதலால், ஒழுக்கத்திற்கு வித்தாகக் காலம் போற்றுக. வாழ்க்கையை வளர்க்கும் வள்ளுவத்தைப் போற்றுக; பொறிகளுக்கும் புலன்களுக்கும் நற்காட்சிகளையும், நற்கருத்துகளையும் விருந்தாகத் தருக.