பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



101



‘ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.’

136

மனவலிமையுடையோர், ஒழுக்கத்தில் நின்றபின் அருமை நோக்கி ஒழுக்கத்தைக் கைவிடார். ஒழுக்கத்தில் வழுவிவிடின் இழிகுலத்தைச்சாரும் குற்றமுண்டாகும்.

ஒழுக்க நெறியில் நிற்றல் சற்று அருமையான முயற்சியேயாகும். தொடக்கநிலையில் ஒழுக்கநெறி நிற்றல் இடர்ப்பாடாக இருக்கும்; ஆயினும், பழகப் பழக ஒழுக்கநெறி இயல்பாக அமைந்துவிடும். எளிதில் எய்த இயலாத ஆக்கத்தையும் பெருமையையும் அடையலாம். ஆதலால், அருமை கருதி அயர்ந்துவிடாமல் தொடர்ந்து ஒழுக்க நெறியில் நிற்றல் வேண்டும்.

‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.’

137

ஒழுக்கமுடையவர் மேம்பாட்டை அடைவர். ஒழுக்கம் தவறியவர் அடைதற்குரியதல்லாத பழியை அடைவர்.

ஒருவர் ஒழுக்கம் உடையராயிருந்தால் அவர்க்கு மட்டும் நன்மையன்று. அவரைச் சார்ந்தோர்க்கும் அவர்தம் நாட்டுமக்களுக்கும்கூட நன்மைதருவது. அதனால், எல்லார்க்கும் நன்மைபயக்கும் ஒழுக்க நெறியை அடைதல் நன்மையையும் தரும்; மேன்மையையும் தரும்.

ஒழுக்கத்தினின்றும் இழிதல், தனக்கும் தீமையைத் தரும்; மற்றவர்க்கும் தீமையைத் தரும். பலரால் பழிக்கப்படும் பழியையும் தரும். ஆதலால், ஒழுக்கத்தில் தவறுவதைத் தவிர்த்திடுக. ஒழுக்கத்தில் தவறுவதால் பொதுப்படையாக, “கெட்டவர்” என்று பெயர் வாங்கிவிடுவதால் சில சமயங்களில் தாம் செய்யாத தவறுகளுக்கும் ஆளாக்கப்படுவர் என்பதனால் “எய்தாப்பழி” என்றார்.