பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.’

138

நல்லொழுக்கம் அறத்திற்கு வித்தாகும். தீய ஒழுக்கம் என்றும் துன்பம் தரும்.

நல்லொழுக்கம் அறத்திற்கு வித்தாகும் என்று கூறியதால் இன்பம் வந்தடையும் என்பது உணர்த்தியது. தீயொழுக்கம் என்றும் துன்பம் தரும் என்றதால் இம்மை மறுமை இரண்டிலும் என்பது பெறப்பட்டது.

ஆதலால், அறத்திற்கும் இன்பத்திற்கும் காரணமாக இருக்கும் ஒழுக்கத்தை இடையீடின்றி மேற்கொள்க.

‘ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.’

139

ஒழுக்கமுடையவர்கள் மறந்தும் தம் வாயால் தீய சொற்களைச் சொல்லுதல் இயலாது.

ஒழுக்கமுடையவர்கள் மற்றவர்களுக்குத் தீங்குபயக்கும் தீய சொற்களைச் சொல்லமாட்டார்கள். அவர்கள் முயன்றாலும் அவர்களால் சொல்லமுடியாது. அது அவர்கள் தம் ஒழுக்கம்.

நெஞ்சிற் கிடக்கும் சிந்தனை-உணர்வுகளுக்கு ஏற்பவே சொற்கள் அமையும். நெஞ்சத்தில் அல்லது சிந்தனையில் நல்லெண்ணம் இருப்பின் சொற்களும் நல்லனவாக அமையும். ஆதலால், ஒழுக்கம் என்பதை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டுமானால் மனம், புத்தி, சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். ஒன்றிற் கடைப்பிடித்து மற்றொன்றிற் கடைப்பிடியாது போனாலும் ஒழுக்கம் சிதைவுறும். ஆதலால், வாழ்க்கையில் அனைத்துத் துறையிலும் ஒழுக்க நெறி பேணுக.

‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.’

140