பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



105


தீமையால் தாம் அழிந்துபடாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொறையுடைமை என்பது தமக்குத் தீமை செய்பவர்க்குத் தீமை செய்யாமையோடு அத்தீமையால் தாம் அழிந்துபோதலுக்கு உடன்படுவதன்று. மேலும், பிறர் செய்யும் தீமைகளால் அழியாமல் பாதுகாத்துக் கொள்வதோடன்றி அத்தீமைகளின் வாயிலாகவே தம்மை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். அதுமட்டுமின்றித் தமக்குத் தீமை செய்தார்க்கு வாழ்வும் அளிக்க வேண்டும்.

நிலம், தன்னைக் கொத்தியும், வெட்டியும் துன்புறுத்துவாருக்குத் துன்பம் செய்வதில்லை. மாறாகத் தன்னைக் கொத்துதலையும், வெட்டுதலையும் பொறுத்துக் கொண்டு அதுவே வாயிலாகத் தன்னை வளப்படுத்திக் கொண்டு கொத்தியும் வெட்டியும் துன்புறுத்தினார்க்கு வாழ்வளிக்கிறது. அதுபோல வாழுதலே பொறையுடைமை.

அறியாதவர்கள் அகந்தையின் காரணமாகச் செய்யும் துன்பத்தைப் பொறுத்தாற்றுதல் வலிமையின் அடையாளம்; ஆதலால், தமக்குத் தீமை செய்தார்க்குத் தீமை செய்யாமை கோழைத்தனம் ஆகாதோ? என்று வருந்திக் கவலைப்படக் கூடாது. தீமை செய்தார்க்கும் தீமை செய்யாமைதான் வன்மை என்று கருதி மனநிறைவு பெறவேண்டும். இங்ஙனம் பொறுத்தாற்றும் பண்பின் பெருமையை அறியாதார் கோழைத்தனம் என்று பழிதூற்றாது புகழினைச் சேர்ப்பர் என்பதையும் அறிதல் வேண்டும்.

துறவு, தூய்மையானதுதான்; ஆயினும் துறவிலும் தூய்மையுடையது பிறர் சொல்லும் பழிச்சொற்களைத் தாங்கிக் கொள்ளுதல். பெரியவர்கள் உண்ணா நோன்பிருக்கும்பொழுது சிறு செயல்களைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெகுண்டும் பேசுவர். அதனால், நோன்பு பயனற்றுப் போகிறது. பிறரின் பழிச்சொல்லைத் தாங்கிக் கொள்பவர்கள் உண்ணாநோன்பு மேற்கொள்ளும்