பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொண்டு அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளத் தக்க வகையில் கடமைகளை எடுத்துக்கொண்டு ஓயாது தொடர்ந்து செய்தல்மூலம் பயனற்ற சொற்களைப் பேசும் பழக்கத்தைத் தவிர்க்கலாம்.

சொல்லவேண்டிய ஒன்றை நன்றாக ஆராய்ந்து முடிவெடுத்துச் சொன்னால், குறைந்த சொற்களில் நிறைந்த கருத்தை விளக்க முடியும்.

வாழ்க்கையில் நோக்கமில்லாதவர்கள், யாதொரு கடமையையும் பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளாதவர்கள், எத்தர்களாக வாழ்பவர்கள், நடுநிலைப் பண்பில்லாதவர்கள், விடாப்பிடிக்காரர்கள் ஆகியோரிடம் கூடுமானவரையில் பேசுவதைத் தவிர்த்துவிட வேண்டும். ஒரோவழி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் சொற்செட்டாக இரண்டொரு சொற்களில் பேசி முடித்துவிட வேண்டும். இத்தகையோரை மனமாற்றம் அடையச்செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் நாம் பேசி நம்முடைய காலத்தை வீணாக்கக் கூடாது.

ஆயினும், மேற்கண்ட தீயஇயல்புடையோரை முற்றாக ஒதுக்கினாலும் அவர்கள் தீயநெறியிலேயே மேலும் வளர்வர். இங்ஙனம் கைவிடுதலும் வரவேற்கத்தக்கதன்று. ஆதலால், அவர்களிடத்திலிருக்கிற தொடர்பை முற்றாக நீக்கிவிடாமல், அவர்கள் போக்கிற்கு நாம் போய்விடாமல் தற்காத்துக் கொண்டு, மெல்ல மெல்ல அவர்களையும் கடமையில் கருத்துடையவர்களாக வளர்க்கவேண்டும். இத்தகையோரிடத்தில் நாம் பேசும்பொழுது வாழ்க்கையின் நோக்கம் அருமை, கடமை ஆகியன குறித்துப்பேசுதல் பயனற்ற சொற்களைப் பேசுதலாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இத்தகைய பேச்சுகளல்லாதவற்றை ("அரட்டையடித்த”லைத்)தான் நாம் பயனற்ற சொற்கள் என்று கருதுகிறோம்.