பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சொற்களால் தடைப்படுவோர் தமது செயல் தடுப்புக் கருதியும் வெகுளுவர். பயனற்ற சொற்கள் பேசுதல் இழிவையே தருவதால் இகழ்வாக நினைக்கப்படுவர்.

‘பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.’

192

அறிஞர்முன் பயனற்ற சொற்களைச் சொல்லுதல் நண்பர்களிடத்து விரும்பத் தகாத செயல்கள் செய்வதை விடத் தீமையாம். நண்பர்கள் நட்பு நலன் கருதிப் பொறுத்தாலும் பொறுப்பர். ஆனால் யாரும் பயனற்ற சொற்களைப் பேசிப் பொழுது போக்குதலை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

‘நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.’

193

ஒருவன் நயன்மை (நீதி)யற்றவன் என்பதை அவன் பயனற்ற பொருள்களை விரித்துரைக்கும் உரைகளால் அறியலாம்.

‘நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.’

194

பலரிடத்தும் பயனற்ற-பண்பற்ற சொற்களைச் சொல்பவர், நன்மை, நயன்மை (நீதி) முதலிய நற்குணங்களிலிருந்து நீங்குவர்.

‘சீர்மை சிறப்போடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.’

195

இனிய தன்மையுடைய உயர்ந்தோர் சோர்வினாற் பயனற்ற சொற்களைச் சொல்ல நேரிடுமாயின் அவருடைய உயர்வும் மதிப்பும் நீங்கிவிடும்.

இதனால், எவ்வளவு உயர்ந்தோரும் பயனற்ற சொற்களைச் சொல்லக்கூடாது என்ற ஒழுக்கத்தைச் சோர்விலாது காப்பாற்ற வேண்டும்.