பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்க்கைக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் பயன் தரக்கூடிய சொற்கள் மிகுந்த சிறப்புடையதாகும்.

‘பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.’

199

ஐயத்திற்கிடமின்றித் தெளிந்த அறிவுடையோர் பயனற்ற சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்கள்.

ஐயம் நீங்கிக் குற்றமற்ற அறிவுடையவர்கள் வளர்ந்தவர்கள், அவர்கள் பயனற்ற சொற்களை ஒரு போதும் சொல்லமாட்டார்கள்.

‘சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.’

200

பயனுடைய சொற்களையே சொல்க, பயனற்ற சொற்களைச் சொல்லற்க.

உடன்பாட்டு வகையால் பயனுடைய சொற்களைச் சொல்லுக, என்றும் எதிர்மறை வகையால் பயனற்ற சொற்களைச் சொல்லற்க என்றும் சொல்லியது இந்த ஒழுகலாற்றின்மீது திருவள்ளுவருக்கிருந்த அழுத்தத்தை, உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.

21. தீவினையச்சம்

அறமல்லாதன பாவங்கள், தீய வினைகள் செய்ய அஞ்சுதல். எண்ணத்தாலும் சொற்களாலும் நிகழும் குற்றங்களை விலக்கிய ஆசிரியர் தீயன செய்தலையும் விலக்குகின்றார்.

தீவினைகள் செய்ய அஞ்சினால் செய்யும் துணிவு ஏற்படாது. தீவினைகள் செய்ய அஞ்சுதல் என்பது ஓர் உயர் பண்பு. எதைச் செய்தாலும் இச்செயலால் மற்ற உயிர்களுக்கு யாதானும் ஒரு துன்பம் உண்டாகிவிடுமோ என்று எண்ணி