பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



123


ஆய்வு செய்து யாதொரு துன்பமும், யாதோர் உயிர்க்கும் வராது காரியங்களைச் செய்தல் தீவினை அச்சமாகும்.

தீய செயல்களில் அச்சம் ஏற்படுதலுக்குக் காரணம் தீய செயல்களால் வாழ்க்கையில் துன்பங்கள் நிறையத் தோன்றுகின்றன என்பதே. எந்த உயிர்க்குத் துன்பம் செய்யப் பெற்றதோ அந்த உயிர் தனக்குத் துன்பம் செய்தாருக்குத் துன்பம் செய்ய முற்படுதல் இயற்கை. தீயன செய்தமைக்குரிய பயனை மறுமையிலும் துய்த்தாக வேண்டும். இஃதொரு முறை (நியதி). அதுமட்டுமன்று, தீயன செய்வதிலேயே காலமெல்லாம் போனதால் நல்லுலகம் பெறுதற்குரிய நல்வினைகள் செய்யப் பெறவில்லை. ஆக, இம்மை-மறுமையில் ஏற்படும் தீமைகட்காகவே தீவினை அஞ்சப் படுகிறது.

அடுத்து, யாதானும் ஒரு நன்மை செய்தல் என்பது அரிய முயற்சியினால் ஆவது, இஃது எளிதில் கை கூடுவதில்லை. நன்மை செய்யுமாறில்லையாயினும் தீவினையிலிருந்து அஞ்சித் தற்காத்துக் கொள்ளுதல் அறம் என்ற எண்ணம்.

1. தீவினை அஞ்சுதலாகிய நற்பண்பினைக் கடைப் பிடித்தொழுக நம்முடைய பொழுதெல்லாம் நற்பணிகளைக் கடமைகளை வகுத்துக் கொண்டு ஓயாது தொழிற்பட வேண்டும். சோம்பிய மனம் எளிதில் தீய வினைகள் செய்தலில் ஈடுபடும். இஃது இயற்கை.

2. இன்புற்று மகிழ்தலையே ஒவ்வொருவரும் விரும்புகிறோம். ஆதலால், செய்யும் தீய வினைகளால் மற்றவர்கள் பெறக்கூடிய துன்பத்தை எண்ணிப் பார்த்தாலே அச்சம் ஏற்படும்; செய்யும் துணிவு வராது.

3. மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்தலாகிய உறவுப் போக்கு, சமநோக்கு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுதல் தீயவினைகள் செய்வதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழி.