பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



129



5. எந்த ஒன்றையும் குமுகாய உணர்வுடன் சிந்தித்துக் குமுகாயம் பயனுற வேண்டும் என்ற உணர்வுடன் இயற்றுதல் ஒப்புரவறிதலை நடைமுறைப்படுத்தும் வழி.

6. ஒப்புரவறிதல் ஒழுக்க நெறி நிற்கும் பொழுது ஒரோ வழி இடர்ப்பாடுகளும் வரலாம். குமுகாயம், நன்மையைத் தெரிந்து ஏற்காமல் மறுதளிக்கலாம்; தொல்லைகளைத் தரலாம். ஆயினும் ஒப்புரவறிதல் நெறி நிற்றலே சிறப்புடைய வாழ்க்கை. வரலாற்றில் ஒப்புரவறிந்து வாழ்வோர் இடம் பெறுவர். ஏசு, முகம்மது நபி, சாக்ரடீசு, அப்பரடிகள், வள்ளலார், காந்தியடிகள் முதலானோரின் ஒப்புரவு நெறி நின்ற வாழ்க்கை அன்றைய குமுகாயத்தின் முன்னோடிகளால் ஏற்கப்படவில்லை; மாறாக அவர்களுக்குத் தொல்லைகளும் வழங்கின. ஆனால், இன்று உலகம் நினைவு கூர்வது இந்தப் பெருமக்களையேயாம்.

‘கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.’

211

மாற்று உதவியை எதிர்பார்க்காது மழை பொழிவதைப் போல, ஒப்புரவாளர்கள் யாதொன்றையும் எதிர் பாராது குமுகாயத்துக்கு நன்மைகளைச் செய்வர்.

1. ஒன்றை எதிர்பார்க்கும் மனநிலையில் உதவிகளைச் செய்தல் வணிக மனப் போக்கினைச் சார்ந்தது. வணிக மனப் போக்கு அன்பு, அறம், அருள் ஆகிய உணர்வுகளுக்கு எதிர் மறையானது. ‘அறவிலை வணிகன் ஆய் அலன்’ என்பது புறநானூறு.

2. எதிர்பார்த்தது நடவாத போது ஏமாற்றம் ஏற்பட்டு ஒப்புரவுக்கு எதிர்மறையான பகை உணர்வு கால் கொள்ளும். ஆதலால், யாதொன்றையும் எதிர்பாராமல் செய்வதே ஒப்புரவுக்கு நல்லது.

தி.iv.9.