பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



133



”பெருந்தகையார்” தமக்கு வரும் இடர்களையும் ஏற்றுக் கொண்டு குமுகாயம் பயனுற வாழ்பவர்.

மருந்து மரம், தான் இடர்ப்பட்டும் சார்ந்தார் நோய் நீக்கத்திற்குப் பயன்படும்.

இடர்ப்பாடுகளைப்பற்றி எண்ணாது மற்றவர் துன்பத்தை நீக்க முயல வேண்டும்.

‘இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.’

218

வாழ்க்கையின் கடப்பாட்டினை அறிந்தவர்கள் வளமான செல்வம் இல்லாத காலத்திலும் ஒப்புரவு நெறி நிற்பதற்குத் தளர்ச்சியடைய மாட்டார்கள் (முந்துவர்).

வளமான செல்வம் உள்ளபோது செய்தலைவிட வறுமையுற்ற நிலையில் ஒப்புரவு நெறி நிற்றலின்மூலம் தன் துன்பம் தாங்கும் உணர்வும் செல்வம் ஈட்டும் முயற்சியும் தோன்றும். ஆதலால் ஒப்புரவறிதலுக்கு வறுமை தடையில்லை. வறுமை நிலையில் ஒப்புரவறிதல் இயலாது என்று கருதி வாளா இருத்தல் கேடு செய்யும். இந்நிலையிலும் முயன்று செய்தலே வாழ்க்கையின் கடப்பாடு.

‘நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.’

219

நேர்மையாளனுக்கு வறுமையாவது, ஒப்புரவுப் பண்பை முறையாகச் செய்ய இயலாது போதலேயாகும்.

நேர்மையாளனுக்கு வறுமை, ஒப்புரவு மேற்கொள்ளாமையேயாகும்.

தாம் நுகர்தலைவிட மற்றவர்க்குப் பயன்பட வாழ்தலே பெரிது என்று கருதுதல் ஒப்புரவு நெறிக்குரிய பண்பு.

எந்தச் சூழ்நிலையிலும் ஒப்புரவு நெறி நிற்கத் தவற வேண்டாம்.