பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



139




உயர்குடிப் பிறந்தார்க்குத், தம்மிடம் இரந்தவரின் இன்முகம் காணும் அளவுக்கு வழங்க இயலாத பொழுது இரக்கப்படும் நிலையில் இருத்தலும் துன்பமேயாம்.

இந்தக் குறள் பட்டறிவில் பிறந்த குறள். இந்தக் குறள், நம்மில் பலருடைய வாழ்க்கையில் அன்றாட நடைமுறை. இரப்போன் பேராசையுடையோனாக இருந்தாலும், இரப்போனின் மனம் நிறைவு பெறத்தக்க வகையில் வழங்குவதற்குப் பொருளில்லாது போயினும் இரக்கப்படுதல் துன்பந்தான்னே!

இத்துன்பத்திலிருந்து தப்பிப்பதற்கான வழிகளாவன:

1. வறுமையுற்றோர்க்குத் துய்ப்பனவாகிய பொருள்களையே வழங்காமல், அந்தப் பொருள்களை அவர்கள் பெறுவதற்குரிய வாயில்களை அமைத்து ‘முதலை’ மட்டும் தருதல் ஒரு வழி.

2. ஈகை அறம் மேற்கொண்டால் அந்த அறம் வளரும் தன்மையது. அதனால் ஈகை அறத்தினை முழுமையாகச் செய்யவும், இடையறவு படாமல் இயற்றவும் தொடர்ந்து அறிவறிந்த ஆள்வினையை மேற்கொண்டு பொருளீட்டுதல் இன்றியமையாதது.

‘ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.’

225

தவத்தின் ஆற்றலால் பசியைப் பொறுத்துக் கொள்ளும் தவத்தோரின் ஆற்றல், உயிர்களை வருத்தும் பசியை உணவு முதலியன கொடுத்துத் தீர்த்து வைப்போரின் ஆற்றலுக்குப் பின்னதேயாம்.

உயிர்க்குலத்தை வருத்தும் பசியை, உணவு முதலியன வழங்கி நீக்குபவர்களின் ஆற்றலுக்கு அடுத்துத்தான் தவத்தின் வலிமையால் பசியைப் பொறுத்துக் கொள்வோரின் ஆற்றல் வைத்தெண்ணப்படும்.