பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



143


உணர்வில் உடன் பிறந்தாரைக்கூட, குருதிக் கலப்புடைய சுற்றத்தாரைக்கூட அந்நியராக்கும் கொடுமையை நாள் தோறும் காண்கின்றோம். பழைய வரலாறுகளும் குடும்பப் பாசத்தின் அதிக வளர்ச்சியால் ஏற்பட்ட தீமையை எடுத்துக் காட்டத் தவறவில்லை. நமது திருவள்ளுவர் குடும்பத்தையே அறமனையாக்கும் புதுமை செய்கிறார். மற்றவர்க்கு உதவி செய்வதால் குடும்பம் கெடாது வளரும் என்ற நம்பிக்கையைத் தருகின்றார். புகழ் ஓர் ஊக்குவிக்கும் வலிவு ஆகும். ஆதலால், புகழ் மேலும் மேலும் பொருள் ஈட்டத்தில் ஆற்றுப்படுத்தும், ஈத்துவந்து புகழுடன் வாழும் வாழ்க்கை உணர்வை வளர்க்கும் என்பது வள்ளுவத்தின் முடிவு.

1. அறநெறி வாழ்க்கை மேற்கொள்வதன் மூலம் புகழ் பெறலாம்.

2. எந்தச் சூழ்நிலையிலும் அறமல்லாதனவற்றை - பிறரால் பழிக்கப்படுதற்குரியனவற்றைச் செய்யா திருத்தல் புகழைத் தரும்.

3. தாம் இடர்ப்பாடுற்றுத் துன்புறும் பொழுதும் அறநெறி பிறழாது வாழ்ந்தால் புகழ்வரும்.

4. மகவெனப் பல்லுயிரும் ஒக்க நோக்கி அன்பு செய்து வாழ்தல்வழி புகழ் தோன்றும்.

5. செய்தற்களிது என்று கருதி மற்றவரால் கைவிடப் பெறும் கடமைகளை எடுத்து அரிதின் முயன்று செய்து முடிப்பதன் மூலம் புகழ் பெறலாம்.

புகழ்பெற முற்றிலும் தற்சார்பான வாழ்க்கையைத் தவிர்த்தல் வேண்டும். (முற்றிலும் தற்சார்பானது என்பது அப்பட்டமான தன்னலம்-மற்றவர்க்கு இம்மியும் நலம் பயந்து விடக்கூடாது என்ற எண்ணம்).