பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



145



‘உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.’

232

உலகத்தில் ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்பவர் சொல்வதெல்லாம், வறுமையால் இரப்பவர்க்கு அவர் வேண்டியதொன்றை ஈவார்மேல் நிற்கும் புகழேயாம்.

புகழினைப் பல வாயில்களால் அடையலாம்; எழுத்து பேச்சு வீரம்-இன்ன பிறவற்றாலும் புகழ் வந்துசேரும். ஆனால் வறியவர்க்குக் கொடுத்து அவர்தம் துன்பத்தை நீக்கும் புகழே சிறந்த புகழ்; ஏனைய புகழெல்லாம், அடுத்த நிலையினவே என்பது கருத்து.

1. மற்றவரின் வறுமை நீக்கி அவர் துன்பத்தை மாற்றி வாழ்விக்கப் பயன்படும் அறிவை, ஆற்றலை, செல்வத்தை மற்ற வழிகளில் வரும் புகழ் கருதிச் செலவழித்து விடக் கூடாது.

2. ஒரோவழி வளம் (வசதி) உடையோரும் உதவி நாடி வருவர் அவருக்குக் கொடுத்தாலும் புகழ் கிடைக்கும். ஆனால், இது புகழன்று; புகழ் போலத் தோன்றும் விளம்பரமே! வறுமையுடையோர்க்கு உதவுதலே உண்மையான புகழினைத் தரும். இந்தப் புகழுக்குச் செலாவணி அதிகம் இருக்காது. ஆனால், உயிர்க்கு ஊதியமாக நின்று நிலையான புகழைத் தரும்.

‘ஒன்றா உலகத்(து) உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்.’

233

இந்த உலகத்தில், உயர்ந்த புகழையல்லாமல் அழியாது நிற்பது வேறொன்றும் இல்லை.

“ஒன்றா உலகத்து” என்பதனை “ஒன்றா உயர்ந்த புகழ்” என்று கொண்டு கூட்டிப் பொருள் கொண்டு, தனக்கு இணையில்லாதவாறு என்று பொருள் கூறுவர். இது தவறில்லை, ஆயினும் சிறந்த நோக்கில்லாதது.

தி.iv.10.