பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



147



ஆதலால் விளம்பர வேட்டை ஆடற்க! செய்தித்தாள்களில் பெயர்களைத் தேடி அலைய வேண்டாம்; விழாக்கள் எடுத்து விளம்பரம் தேடவேண்டாம்; மானிட சாதியை வருத்தும் துன்பங்களை மாற்றுதற்குரிய நிலையான அரிய முயற்சிகளையும் செயல்களையும் மேற்கொள்க! அச்செயல்களே புகழ்!

‘நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.’

235

ஆக்கம் போல் கேடும், வாழும் சாக்காடும் திறப்பாடுடையவர்க்கே உண்டு; மற்றவர்க்கு இல்லை.

தவறான முறையில் வரும் ஆக்கம் அல்லது வளர்ச்சி ஆக்கம்போலக் காட்டிக் கேட்டினைச் செய்யும், இதைத் தவிர்த்திடுக.

சாக்காடு, வரக்கூடிய ஒன்றே; சாக்காட்டிற்கு அஞ்சிப் பயன் என்ன? செத்தும் சாகாமல் வாழ்தல் அருமைப்பாடுடைய வாழ்க்கை நல்லறச் செயல்கள் பல செய்து புகழ்பெறும் வித்தகர்களுக்கே இந்நிலை அமையும்; ஆதலால், வித்தகராக முயல்க!

‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.’

236

ஒருவர் மற்றவர் காண வெளிப்பட்டுத் தோன்றும் நிலை ஏற்படின் புகழோடு தோன்றுக. அங்ஙனம் மற்றவர்முன் புகழொடு தோன்ற இயலாதார் தோன்றாது மறைந்தொழிதல் நன்று.

புகழுக்கு ஏதுவான குணத்தோடு பிறக்கவேண்டும் என்றும் உரை கூறுவர். பிறந்தபின் தேடுவதே குணம். ஆதலால், இவ்வுரை பொருந்தாது.

நல்லறச் செயல்களைச் செய்து புகழுடன் விளங்கு! அதன்பின் அரங்கிற்கு வா!