பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



155


அருளுணர்வு கால்கொள்ளும்; புலாலைத் தவிர்க்கும் துணிவு தோன்றும்.

2. வாழ்க்கை நிலையான பயனை - இன்பத்தினைக் குறிக்கோளாகக் கொண்டது. இக்குறிக்கோளிலிருந்து வழுவித் துன்பத்தினை அனைத்துக் கொள்ளுதல் போலாகும் புலாலுண்ணல் என்பதனை எண்ணுக. அவ்வழி புலால் உணவில் வெறுப்புத் தோன்றும்.

‘உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.’

255

ஊன் உண்ணாமையால் உள்ளது உயிர்நிலை. ஊனை உண்டால் நரகத்திற்குச் செல்ல நேரிடும். அந்நரகமும் தன்னிடம் அகப்பட்டவரை வாயில் திறந்து வெளியே விடாது.

ஊனுண்டோர் மீளாத் துன்பம் அடைவர் என்பது கருத்து.

அருளுடையோரே உயிருடன் வாழ்வோர்; என்றும் மதிக்கப்படுபவர். அதனால், “ஊன் உண்ணாமை உயிர் நிலை” என்றார்.

1. நரகத்தில் அனுபவிக்க வேண்டிய துன்பத்தினை எண்ணிப் பார்த்தால் புலால் உணவில் அச்சம் தோன்றும்; இந்த அச்சம் அருளுணர்வைத் தந்து புலால் உணவைத் தவிர்த்திடும் நெறியில் உய்த்துச் செலுத்தும்.

‘தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.’

256

ஊனினைத் தின்பதற்காக உயிர்களை உலகத்தார் கொல்லாரெனின், விலைக்கு ஊனைத் தருவாரும் இல்லை. ஊனினை உண்பார் யாரும் இல்லையாயின் ஊன்வாணிகம் இல்லை; அதனால் கொலையும் இல்லை என்பது கருத்து.