பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



203


அவன் பின்னால் அந்தப் பகைவன் திட்டிக்கொண்டே வந்திருக்கிறான். அரசனும் கேட்டுக்கொண்டே வந்தானாம். அவன் வீட்டுக்குள்ளே போகிறபோது, காவலரை அழைத்து திட்டுகின்ற பகைவனுடன் ‘அவனுக்குக் காவலாய் வீடுவரை சென்று திரும்பிவா’ என்று ஒரு விளக்கையும் கொடுத்து அவனை அனுப்பினானாம்.

நாள் முழுவதும் கங்கணம் கட்டிக்கொண்டு, தன்னைத் திட்டிய மனிதனைக் கடமை முடிந்த பிறகு அவனைப் பத்திரமாக வீட்டிலே கொண்டுபோய் விட்டு வா என்று சொன்னது, ‘தத்தா, நமர்!’ என்று சொல்லியதற்கு ஒப்பானதாக இருக்கிறது.

“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்”

என்றார் திருவள்ளுவர்.

அவ்வளவு பெரிய பண்பு அரசுக்கு இருக்கவேண்டும் என்று சொன்னார். அதற்குப் பிறகு அரசனுக்கு சொல்லுகிறபொழுது, படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் இவைகளையெல்லாம் பெறுவது அரசு என்று சொன்னால் கூட, ‘உன்னை இடித்துப் பேசுகிற ஆள் இல்லை என்று சொன்னால், அது அரசு இல்லை’ என்று சொல்லுகிறார்.

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.’

448

என்றார்.

அரசு தனக்கு அரணைப் போல், படையைப் போல, பாதுகாப்பைப் போல, இடித்துப் பேசுகின்ற மனிதனை நட்பாக வைத்துக்கொள்ள விரும்ப வேண்டும்.

காரணம், அவனுடைய தொல்லை வேண்டாம் என்பதற்காகவாவது, ஒழுங்காய்ச் செய்வாய் அல்லவா? காடுகளில் எல்லாம் ஏன் விலங்குகள் இருக்கின்றன என்று ஒருவர் அதிசயமாக ஆராய்ச்சி செய்தார்.