பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்கிறார். இது ஆய்வுக்குரியது. அடிகளார் சமயப் பற்றுள்ளவர் என்பது மட்டுமன்றி ஒரு சமய நிறுவனத்தின் தலைவர். அந்தப் பீடத்தில் அமர்ந்து கொண்டும் அவர் சமயத்தால் நேர்ந்த நன்மை தீமைகளைப் பகுத்தறிவுக் கண்கொண்டு பார்க்கத் தவறவில்லை. பார்க்கும் துணிவு அவருக்கிருந்தது. ஏன் எனில், அவர் அடிப்படையில் சமுதாயப் பற்றாளர். சமுதாயத்திற்காகத் தான் சமயம் என நம்புபவர். சாதி பற்றிப் பேச வந்த அடிகளார் சாதிகளின் தோற்றத்திற்குச் சமயம் காரணமல்ல என்று கூறுவாரேனும்

வரலாற்று அடிப்படையில் நோக்கினால் நிலப் பிரபுத்துவத்தில் பிறந்து வளர்ந்தது தான் சாதி. இந்தச் சாதி முறையை நிலப் பிரபுத்துவத்திற்கு அனுசரணையாக அங்கீகரித்த பாவத்தை மதம் செய்தது உண்மை (303)

என ஒப்புகிறார். மதம் செய்த ‘பாவம்’ என்றே தயக்கமின்றிக் கூறிவிடுகிறார்.

பொதுவாக நமது புலவர்கள் குறளை ஒரு நீதி நூலாகவே பார்த்து வந்தனர். ஆங்காங்கு இலக்கியப் படைப்பாகவும் பார்த்தனர். ஆனால் அடிகளார் குறளின் முழுப் பரிமாணத்தையும் தமிழ்ச் சமுதாயத்தின்முன் பின்வருமாறு பிரகடனம் செய்கிறார்.

.....சமயச் சார்பற்றது, வள்ளுவரின் சமயம் தனித் தன்மையுடையது. சமயக் கணக்கர் வழி சாராதது. குறளியம் நாடு, மொழி, இனங்களைக் கடந்தது. குறளியத்தின் நெறி புது நெறி, பொது நெறி; குறளியம் உலகந் தழீஇயது; நம்பிக்கைக்குரியது. எளிதில் பின்பற்றத்தக்கது. இது வரையில் தோன்றியுள்ள அனைத்து நூல்களிலும் திருக்குறள் உயர்ந்தது. வையகத்தை வாழ்வாங்கு வாழ வழி நடத்துவது. குறளியத்தில் தத்துவங்கள் உண்டு. மெய்ப் பொருள் சிந்தனைகள் உண்டு. பொருளியல் கோட்பாடுகள் உண்டு. சமுதாய நெறிகள் உண்டு. துறவும் உண்டு. ஆக குறளியம் ஓர் பொதுமறை; தமிழ் மறை; குறளியத்தில் அறநெறி அடையாளம் காட்டப்படுகிறது; பொருள் நெறி போற்றப் படுகிறது. குறள் நெறியில் ஆள் வினையாளர்களும் அருளாளர்களும் சமுதாயத்தை வழிநடத்தும் உறுப்புகளாவர். குறள் நெறி நிலமிசை நீடுவாழ வழிகாட்டுகிறது. (307)

அடிகளாரின் எழுத்துகள், சொற்பொழிவுகள் ஆகியன குறள் பற்றிய மேற்கண்ட அவரது இந்தத் தீர்ப்பை நியாயப்படுத்துவனவாக, மெய்ப்பிப்பனவாக அமைந்துள்ளன. வருங்காலத் தமிழ்ச் சமுதாயம் அடிகளார் அவர்களை ‘குறள் நெறி பரப்பிய குன்றக்குடி மகா சன்னிதானம்’ என நினைவில் நிறுத்தும்.

அடிகளார் அவர்களின் குறள் பற்றிய கட்டுரைகளை, சொற்பொழிவுகளை, ஒரு நூலாக அன்றி, ஒரு நூல் வரிசையாக வெளியிட மணிவாசகர் பதிப்பகம் முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரிய தமிழ்ப்பணி என்பதில் ஐயமில்லை. பயன் நிறைந்த இப்பனுவல்களைத் தமிழகம் மனமுவந்து வரவேற்கும். படித்துப் பயன்பெறும் என்பதிலும் ஐயமில்லை.