பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தான் வேறு வார்த்தைகளில், வேறு முறையில் திருவள்ளுவர் நமக்கு நினைவூட்டுகிறார். திருவள்ளுவருக்கும் உயிர் உண்டு என்ற நம்பிக்கை உண்டு. அதற்குப் பல்வேறு சான்றுகள் நாம் நினைப்பூட்டலாம். அவருடைய குறள்வழி பார்த்தால், ஒரு கூட்டுக்குள் ஒரு பறவை இருக்கிறது. அந்தப் பறவை அந்தக் கூட்டுக்குள் இருந்து பறந்து போய் விடுகிறது.

‘குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே’

என்பார். தூக்கணாங் குருவிக் கூடு பார்த்திருப்பீர்கள். அதிலே பறவை குடி இருக்கிறது. அது பறந்து போகிறது. அதேபோல, ஓர் உடம்பில் உயிர் தங்கி இருக்கிறது. இதுவும் பறந்து போகிறது. மூச்சு விட மறந்துவிட்டார் என்று சொல்கிறோம். நாகரிகமாகச் சொல்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். இறந்துவிட்டார் என்று சொல்லாமல், மூச்சு விட மறந்து விட்டார் என்று சொல்லுவோம். ஆக உயிர், என்று ஒன்று உண்டு. அந்த உயிருக்கு இன்ப துன்பங்கள் உண்டு. அதற்குத் துய்ப்பும், மகிழ்வும் உண்டு; அதற்குப் பொறிகள், புலன்கள் உண்டு. அது வாழ்க்கையில் வாழ்கிறது. அது ஏழு பிறப்புகள் பிறக்கிறது. அது ஈட்டுகிற ஈட்டங்கள் ஏழு பிறப்பும் தொடரும், என்றெல்லாம் பல்வேறு செய்திகளை வரிசைப்படுத்திச் சொல்லுகிறார். ஆக உயிர் உண்டு என்பதால் ‘மன்னுயிர்’ என்று சொல்லுகிறார். ‘மன்னுயிர்’ என்று சொன்னால் நிலைபெற்ற உயிர். நிலைபெற்ற உயிர் என்று சொன்னால் தோற்றமும் அழிவும் இல்லாத உயிர் என்று பொருள். இவ் உயிரை வாழ்க்கையிலே இப்படியெல்லாம் இயக்குவது எது என்பதற்கு, கடவுள் வாழ்த்திலே திருவள்ளுவர் நாம் செய்கிற வினைகளை, செயல்களைச் சொல்லுகிறார். மீண்டும், மீண்டும் கூறுகிறேன், ஒன்றைத் தயவு செய்து மறந்துவிடக் கூடாது. வினை, விதி என்று சொன்னால், ஏதோ நமது மூளையிலே ஒரு பயங்கரமான பீதி உண்டாக்கி இருக்கிறார்களே, அதுபோன்ற